china image
china image twitter
உலகம்

பழிக்குப்பழி: தன்னைக் கடித்த எலியைத் தானே கடித்துக் கொன்ற கல்லூரி மாணவி! மிரண்டுபோன மருத்துவர்கள்!

Prakash J

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் வூசிச் பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய மாணவி ஒருவர், அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் அவர் விடுதியில் தன்னுடைய அறையில் இருந்தபோது, அவரை எலி ஒன்று கடித்துள்ளது. இதனால் அந்த மாணவி வலியால் துடித்துள்ளார். இதையடுத்து அதைப் பழிவாங்க நினைத்துள்ளார். இதனால் தன்னைக் கடித்த எலியைப் பிடித்து அதன் கழுத்தைக் கடித்து, தனது கோபத்தைத் தீர்த்துக்கொண்டார். அந்த மாணவியின் வெறித்தனமான கடியால் அந்த எலி பரிதாபமாக உயிரிழந்தது.

எலி கடித்ததில் காயம் அடைந்த அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய இந்தச் செயலைக் கண்டு மருத்துவரே அதிர்ச்சியடைந்தார். எனினும், அவருக்கு உடனே ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் அந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த மாணவி நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த செய்தியை, இணையத்தில் 200 மில்லியனுக்கும் அதிகமான பேர் பார்த்துள்ளனர். அதேநேரத்தில், இந்த விஷயம் குறித்து நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதில் பலர், ”உண்மையில் ஓர் எலியின் தலையை கடிக்க எப்படித் துணிந்தார். இதை என்னால் நம்ப முடியவில்லை” எனப் பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலர், “இது ஓர் அற்புதமான செய்தி” என்றும், “பாதிக்கப்பட்ட மாணவி தற்போது எப்படி இருக்கிறார்” எனவும், “எலியின் சுவை எப்படி இருந்தது” எனப் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.