china
china  pt web
உலகம்

மீண்டும் பூமிக்கு அடியில் 10 ஆயிரம் மீட்டர் ஆழ்துளைக் கிணறு தோண்டும் சீனா! என்ன கிடைக்கப் போகிறது?

Angeshwar G

பூமிக்கு அடியில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள உலக நாடுகள் பலவும் பல்வேறு கட்டங்களில் முயற்சி மேற்கொண்டு வந்துள்ளது. இயற்கை வளங்களின் இருப்பை கண்டறியும் முயற்சியாகவும் இச்சோதனைகள் பார்க்கப்படுகிறது. ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் இம்முயற்சியில் இறங்கியுள்ளன. தற்போது சீனாவும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.

ஆழ்துறை கிணறுகளை தோண்ட இருப்பதாக பல நாடுகள் தங்களது அறிவிப்பை வெளியிடும் போதெல்லாம் இயற்கை நலன் சார்ந்த அமைப்புகள் பலவும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்யும். எதிர்ப்புகள் எழும் போதெல்லாம் அம்முயற்சியில் ஈடுபடும் நாடுகள், தங்களிடம் இருக்கும் நியாயங்களையும் அம்முயற்சிக்கான காரணங்களையும் விளக்கும்.

இந்நிலையில், சீனா கடந்த மே மாதத்தில் 10 ஆயிரம் மீட்டர் ஆழமுள்ள ஆழ்துறை கிணற்றை தோண்டும் பணியில் இறங்கியது. சீனாவைச் சேர்ந்த பெட்ரோலிய நிறுவனமான சீனா நேஷனல் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் இப்பணியில் ஈடுபட்டது. இது தொடர்பான அறிவிப்பை சீனா அப்போதே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. சீனாவின் தென்மேற்கு பகுதியான ஷின் ஜியாங் பகுதியில் இப்பணிகள் தொடங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அதே அளவிலான ஆழ்துளைக் கிணறை சிச்சுவான் மாகாணத்தில் ஷெண்டி சுவாங்கே 1 என்ற கிணற்றை சீனா நேஷனல் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தொடங்கியுள்ளது. இதனை சின்ஹூவா என்ற செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

பல்வேறு வகைப்பட்ட உணவுகளுக்கும், மலைகளுக்கும் பெயர் பெற்ற சிச்சுவான் மாகாணத்தில் பூமிக்கடியில் சில ஷேல் எரிவாயுக்கள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. ஷேல் வாயு என்பது இயற்கை வாயுவின் ஒரு வடிவம். பூமிக்கடியில் ஷேல் பாறைகளில் காணப்படும் இது வழக்கத்திற்கு மாறானது என வகைப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியான மின் பற்றாக்குறை, புவிசார் அரசியல் மோதல்கள் மற்றும் உலகளாவிய விலை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் எரிபொருள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாகவே எரிசக்தி நிறுவனங்களுக்கு சீனா அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது.

இது போன்ற பணிகளில் இருக்கும் சிக்கல்களையும் உலகளவில் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். பூமிக்கு அடியில் இருக்கும் பாக்டீரியா வைரஸ் போன்ற உயிரினங்கள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் பூமியின் மிக ஆழத்தில் உள்ள பாறைகளை துளையிடுவதன் மூலம் பாதிப்பு ஏற்படலாம் என தெரிவிக்கின்றனர்.