சீனா, அமெரிக்கா எக்ஸ் தளம்
உலகம்

அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர்| அதிரடி காட்டிய ட்ரம்ப்.. பதிலடி கொடுத்த சீனா!

அமெரிக்கா அறிவித்த அதிரடி வரி விதிப்புக்குப் போட்டியாக, சீனாவும் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

Prakash J

அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்டு ட்ரம்ப், ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், உலகம் முழுவதும் அவரைச் சுற்றிப் பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன. மேலும், தற்போதே அதைப் பற்றிய விவாதங்கள் தொடங்கியுள்ளன. குறிப்பாக, இதுதொடர்பாக அவர் பல அதிரடி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி வருகிறார். குடியேற்றக் கொள்கை, சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு இறக்குமதி வரி அதிகரிப்பு, டாலருக்கு எதிரான எச்சரிக்கை என அதில் அடக்கம்.

டொனால்டு ட்ரம்ப்

”கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும். இது நான் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபின் கையழுத்திடும் கோப்புகளில் ஒன்றாக இருக்கும்” என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப் பொருள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் லியு பெங்யு, “வர்த்தகப் போரில் யாரும் வெற்றிபெற மாட்டார்கள். சீனா-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு இயற்கையில் பரஸ்பர நன்மை பயக்கும் என்று சீனா நம்புகிறது” என தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில், சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பொருள்களின் பட்டியலில் கணினிகளுக்கான சிப்புகளைத் தயாரிக்கும் இயந்திரங்கள், மென்பொருள்கள், உயர்-அலைத்தொகுப்பு நினைவக சிப்புகள் ஆகியவற்றை அமெரிக்கா சேர்த்தது. இந்தப் பொருள்கள் உயர்தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கு மிகவும் இன்றியமையாதவை ஆகும்.

இதற்கு தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், கேலியம், ஜெர்மானியம், ஆன்டமோனி உள்ளிட்ட பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்படுவதாக சீன வர்த்தகத் துறை அமைச்சகம் தற்போது அறிவித்துள்ளது. அந்தப் பொருள்கள் சாதாரண பேட்டரி முதல் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான ஆயுத தளவாடங்கள் வரை பல்வேறு பொருள்களின் தயாரிப்புக்கு மிகவும் அத்தியாவசியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு, புராஜெக்ட் ப்ளூ ஆய்வின்படி, சுத்திகரிக்கப்பட்ட ஜெர்மானியம் உற்பத்தியில் 59.2% மற்றும் சுத்திகரிக்கப்பட்ட காலியம் உற்பத்தியில் 98.8% சீனாவில் உள்ளது. மொபைல் போன்கள், கார்கள், கணினி பாகங்கள், சோலார் பேனல்கள் மற்றும் இராணுவ தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்க இவை தேவைப்படுகிறது. அதுபோல், 2021ஆம் ஆண்டின் அமெரிக்க சர்வதேச வர்த்தக ஆணைய அறிக்கையின்படி, ஆண்டிமனி தயாரிப்பில் சீனா முதன்மையானது. பேட்டரிகள் முதல் ஆயுதங்கள் வரை தயாரிப்பதற்கு ஆண்டிமனி பயன்படுகிறது.