உலகம்

சீனாவில் மலையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 132 பயணிகளின் கதி என்ன?

ஜா. ஜாக்சன் சிங்

சீனாவில் 132 பேருடன் சென்ற பயணிகள் விமானம் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அப்பகுதியே தீப்பற்றி எரிந்து வருகிறது. இதனிடையே, விமானத்தில் இருந்தவர்களின் நிலைமை என்ன என்று உடனடியாக தெரியவரவில்லை.

சீனாவின் தென் பகுதியில் உள்ள கன்மிங் நகரில் இருந்து குவாங்சோ நகருக்கு செல்வதற்காக, 'போயிங் 737' விமானம் இன்று காலை 11 மணிக்கு புறப்பட்டது. 123 பயணிகள் மற்றும் 9 ஊழியர்கள் என 132 பேர் அந்த விமானத்தில் இருந்தனர். இந்நிலையில், குவாங்ஸி பிராந்தியத்தில் உள்ள ஊசோவ் நகருக்கு மேலே பறந்த போது, திடீரென அந்த விமானத்துக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து, உடனடியாக அந்த விமானத்தை கண்டுபிடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, குறிப்பிட்ட பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டது. இதில், ஊசோவ் நகரின் டெங்க் என்ற கிராமப் பகுதியில் இருக்கும் மலைப்பிரதேசத்தில் விமானம் மோதி விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனிடையே, விமானம் மோதி வெடித்ததில் அங்கிருக்கும் வனப்பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனால் மீட்புப் பணிகள் மேற்கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள் என்பது குறித்து உடனடியாக தெரியவரவில்லை. தீயை அணைத்து மீட்புப் பணிகள் தொடங்கும் போது தான் இந்த விவரங்கள் தெரியவரும் என பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.