இலங்கையில் மனிதப் புதைகுழிகளை தோண்டும் பணி நடைபெற்று வரும் நிலையில் அதில் சிறுமி ஒருவரின் எலும்புக்கூடுடன் புத்தகப்பை ஒன்றும் இருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் யாழ்ப்பாணம் அருகே உள்ள செம்மணி என்ற பகுதியில் ஏராளமான மனித புதைகுழிகள் உள்ள நிலையில் அவற்றை தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 33 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற அகழ்வு பணியில் எலும்புக்கூடு ஒன்று கிடைத்தது.
அதில் நெஞ்சுப்பகுதியின் மேல் கல், கையில் காப்பு, அருகே பள்ளி புத்தகப்பை ஆகியவையும் இருந்துள்ளது. மேலும் பெண்களின் ஆடையை போல ஒரு துணித்துண்டும் கிடைத்துள்ளது. எனவே அது ஒரு சிறுமியுடையதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இலங்கையில் உள்நாட்டுப்போரின் போது ஏராளமான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் அவர்கள் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவை அடுத்து அவற்றை தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்படுகொலைகள் குறித்து சர்வதேச அளவிலான விசாரணை தேவை என தமிழர் கட்சிகளும் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. படுகொலைக்கு நீதி வேண்டி அணையாவிளக்கு போராட்டங்களும் நடைபெற்றன. ஐநா மனித உரிமைகள் ஆணைய உயரதிகாரியும் கடந்த வாரம் செம்மணி வந்து புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்டார்