சீனாவில் பேருந்தில் செல்ல பணம் இல்லாததால் சிறுவர்கள் இருவர், பேருந்தின் அடியில் அமர்ந்து கொண்டு 80 கி. மீ தூரம் பயணம் செய்துள்ளனர்.
சீனாவில் உள்ள தென்குவாங்ஸி கிராமத்தில் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு இருக்கும் மக்கள் வறுமை காரணமாக தங்கள் பிள்ளைகளை விட்டு தொலைவில் உள்ள குவாங்டங் மாகாணத்திற்கு சென்று பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் இங்குள்ள சிறுவர்கள் இருவர், தங்களின் பெற்றோர்களை பார்க்க செல்வதற்கு பணம் இல்லாததால் பேருந்தின் அடியில் அமர்ந்து ஆபத்தான பணியை மேற்கொண்டுள்ளனர்.
8 மற்றும் 9 வயதாகும் இந்த இரண்டு சிறுவர்களும் சுமார் 80 கி.மீ தூரம் வரை பேருந்து அடியில் அமர்ந்து சென்றுள்ளனர். அப்போது வழியில் இருந்த சுங்கசாவடியில் இருந்த போலீசார் பேருந்தை சோதித்துள்ளனர். பேருந்தின் அடியில் பார்த்த அவர்கள், குனிந்தப்படி அமர்ந்திருந்த சிறுவர்களை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்பு, அவர்களிடம் விசாரித்த போது தங்கள் பெற்றோர்களை பார்க்க செல்வதற்கு பேருந்தில் செல்ல வேண்டும், ஆனால் பணம் இல்லாததால் ஓட்டுநருக்கு தெரியாமல் பேருந்தின் அடியில் அமர்ந்து வந்ததாக தெரிவித்தனர். சிறுவர்களின் இத்தகைய செயலை சீனா அரசாங்கத்தின் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.