உலகில் போர் நடைமுறைகள் மாறிவரும் நிலையில் அதற்கேற்ப தனது படை பலத்திலும் மாற்றங்கள் செய்ய இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.
வழக்கமாக போர் விமானங்கள், விமானந்தாங்கி கப்பல்கள், ஏவுகணைகள், பீரங்கிகள் ஆகியவை யுத்த களங்களில் முக்கியத்துவம் பெறும். ஆனால், அண்மைக்காலமாக நடைபெற்ற, நடைபெற்று வரும் போர்களில் சிறிய ட்ரோன்களே மிகப்பெரிய பணிகளை எளிதாக செய்து எதிரிகளை துவம்சம் செய்ய முடியும் என்பது உறுதியாகி வருகிறது. இது தவிர அதிநவீன ரேடார் தொழில்நுட்பங்களும் போர்களில் வெற்றிகளைப் பெற உதவிகரமாக இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
உலகளாவிய போர்க்கள அனுபவங்களை ஆய்வு செய்து அதற்கேற்ப இந்தியாவிலும் ராணுவத்தில் புதிய ஆயுதங்களையும் தளவாடங்களையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஒரு முறை சுடப்படும்போது ஒரு இலக்கை தாக்குவதுடன் அதிலிருந்து தெறித்துச் சிதறி வேறு இலக்குகளையும் அழிக்கும் தன்மை கொண்ட குண்டுகள் சேர்க்கப்பட உள்ளது.
இதுதவிர தரையிலிருந்து விண்ணுக்கு அதிவேகத்தில் பறந்து சென்று பதிலடி கொடுக்கும் QRSAMவகை ஏவுகணைகளை வாங்கவும் ஒப்பந்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஆயுதங்களை படிப்படியாக களைந்துவிட்டு உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட புதிய ரக ஆயுதங்கள் சேர்க்கப்பட உள்ளதாக ராணுவ உயரதிகாரி சுமேர் இவான் டி குன்ஹா தெரிவித்தார்.