பிரேசில் இளைஞர்
பிரேசில் இளைஞர் ட்விட்டர்
உலகம்

தலையில் பாய்ந்த குண்டு: 4 நாட்கள் கழித்து தெரிந்துகொண்ட 21 வயது இளைஞர்.. பிரேசிலில் நடந்த சுவாரஸ்யம்

Prakash J

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, பிரேசில். இந்நாட்டில் கடந்த ஆண்டு இறுதியில், பிரேசிலின் ஜெனிரோ கடற்கரையில் மேடியஸ் ஃபேசியோ (Mateus Facio) எனும் 21 வயது இளைஞர் தனது நண்பர்களுடன் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் பங்கேற்றார். அப்போது திடீரென ஃபேசியோவின் தலையில் ஏதோ தாக்கியதைப்போல உணர்ந்துள்ளார். அத்துடன் அவர் தலையிலிருந்தும் ரத்தம் கொட்டியுள்ளது. இதனால் வலியால் ஒரு துடித்துள்ளார். கல்லோ அல்லது பொருளோ ஏதாவது தவறுதலாக வந்து நம் தலையில் விழுந்திருக்கலாம் என நினைத்துள்ளார். பின்னர், ரத்தம் வழிவது நின்றபிறகு, மீண்டும் நண்பர்களுடன் இணைந்து புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டார். இரவு முழுவதும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, அடுத்த நாள் புதுவருடத்தைக் கொண்டாட தனது சொந்த ஊரான மினாஸ் கெராய்ஸ் மாநிலத்திற்குப் புறப்பட்டார்.

சுமார் 300 கிலோமீட்டர் பயணத்தின்போது, அவரது வலதுகையில் ஆங்காங்கே பிடிப்பு ஏற்பட்டு வாகனத்தைச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டார். வீட்டிற்குச் சென்ற அடுத்த 2 தினங்களில் அவரது வலது கை செயலிழக்க ஆரம்பித்தது. கிட்டத்தட்ட 4 நாட்களுக்குப் பிறகு, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவருக்கு அனைத்துப் பரிசோதனைகளும் செய்யப்பட்டன. அதில், அவரது தலைப் பகுதியில் ஒரு துப்பாக்கிக் குண்டின் 9 மிமீ., அளவுள்ள சிறு பகுதி நுழைந்து, அதனாலேயே அவர் வலது கை செயலிழக்க தொடங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படிக்க: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுடன் சுற்றிய அசைவ உணவு சர்ச்சை... இணையத்தில் வைரலாகும் பதிவுகள்!

பின்னர், 2 மணி நேரம் நடைபெற்ற உயிருக்கு ஆபத்தான அறுவைச்சிகிச்சையின் மூலம் அந்த துப்பாக்கிக்குண்டின் சிறு பகுதியை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். இந்த அறுவை சிகிச்சை குழுவிற்கு ஃப்ளேவியோ ஃபால்கோமிட்டா எனும் அந்நாட்டின் புகழ் பெற்ற நரம்பியல் நிபுணர் தலைமை வகித்தார். தற்போது ஃபேசியோ உடல்நலம் தேறி வருகிறார். காவல்துறையினருக்கு விவரம் தெரிவிக்கப்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அன்று அந்தப் பகுதியில் துப்பாக்கிச் சூடு எதுவும் நடைபெறவில்லை என போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஃபேசியோ, “நான் கல்தான் தாக்கியிருக்கும் என்று நினைத்தேன். காரணம், அப்போது துப்பாக்கிச் சத்தம் எதுவும் என் காதில் கேட்கவில்லை. அதனால் யாரோ தன்மீது கல் எறிந்ததாக நினைத்தேன். இப்படி நினைக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் ஃப்ளேவியோ ஃபால்கோமிட்டா, “அவர் மிகவும் அதிர்ஷ்டசாலி. இந்தக் குண்டு அகற்றப்படாமல் இருந்திருந்தால், அவரது கை மற்றும் உடல் பாகங்களைச் செயலிழக்கச் செய்திருக்கும். எப்படியோ, வெற்றிகரமாக அறுவைச்சிகிச்சை செய்து குண்டை வெளியில் எடுத்துவிட்டோம். அவர் உயிர் பிழைத்துள்ளார். தற்போது அவர் நலமாக இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ராமர் பிரதிஷ்டை நாளில் பேரணி: அல்லா மீது சத்தியம் செய்து ஆவேசமாக பேசிய மம்தா பானர்ஜி - நடந்தது என்ன?