காசாவில் முடிவுக்கு வந்த போர் pt web
உலகம்

அமலுக்கு வந்த போர் நிறுத்தம்... ஏகப்பட்ட விதிமுறைகளை விதித்து மத்தியஸ்தம் பார்க்கும் மூன்று நாடுகள்

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.

அங்கேஷ்வர்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கிட்டத்தட்ட மூன்று மணி நேர தாமதத்திற்குப் பிறகு அமலுக்கு வந்துள்ளது. ஒப்பந்தத்தின்படி, முதல் மூன்று பணயக்கைதிகளின் பெயர்களை கொண்ட பட்டியலை ஹமாஸ் வழங்க காலம் தாழ்த்தியதே இந்த போர்நிறுத்த தாமத்திற்கு காரணமாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. ஆனால் தொழில்நுட்ப காரணங்களால் இந்த தாமதம் ஏற்பட்டதாக ஹமாஸ் தெரிவித்தது. இதனை அடுத்து பட்டியல் இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதை அடுத்து போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது. கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்ரேலுக்கும் ஹமாஸூக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் மூன்று கட்டங்களாக முழுவதுமாக அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக, "இஸ்ரேலால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களுக்கு ஈடாக 33 பணயக்கைதிகளை ஆறுவாரங்களுக்குள் ஹமாஸ் விடுவிக்க வேண்டும். மீதமிருப்பவர்களை விடுவித்தல், நிரந்தர போர்நிறுத்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் இரண்டாம் கட்டத்தில் நடக்கும். மூன்றாம் கட்டத்தில் இறந்த உடல்களை திருப்பி அனுப்புதல், காசாவின் மறுகட்டமைப்பை தொடங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இஸ்ரேல் ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக்கைதிக்கும் ஈடாக 30 பாலஸ்தீன கைதிகளையும், ஒவ்வொரு இஸ்ரேலிய பெண் சிப்பாய்க்கும் ஈடாக 50 பாலஸ்தீன கைதிகளையும் விடுவிக்கும்" என ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. முதற்கட்ட போர் நிறுத்த காலக்கட்டத்தில் இஸ்ரேல் 19 வயதுக்கு உட்பட்ட அனைத்து பாலஸ்தீன பெண் குழந்தைகளையும் விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆறு வார முதற்கட்ட போர் நிறுத்த காலக்கட்டத்தில் மத்திய காசாவில் இருந்து இஸ்ரேலியப் படைகள் படிப்படியாக வெளியேறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காசாவில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் காசாவுக்குள் திரும்புவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கெய்ரோவை தலைமையிடமாகக் கொண்டு போர் நிறுத்தத்தை அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து போன்ற நாடுகள் கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த நிலையில், ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு நாளும் 600 லாரிகள் மனிதாபிமான அடிப்படையில் காசாவிற்குள் அனுமதிக்க வேண்டும். இதில், 50 லாரிகள் எரிபொருள்களை ஏற்றிச் செல்லும். 300 லாரிகள் வடக்கு காசாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

காசாவில் போர்நிறுத்தம் அம்மக்களுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. ஏனெனில், 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவின் மீதான இஸ்ரேலின் போர் தொடங்கியது. போரின் காரணமாக அப்பகுதியில் இருந்து 90% மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். காசாவின் பெரும்பாலான பகுதிகள் இடிபாடுகளாகவே காட்சி அளிக்கிறது. 460 நாட்களுக்கும் மேலாக நடந்த போரில் 46 ஆயிரத்து 788 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.