உலகம்

எல்லா ஆன்லைன் வகுப்பிலும் மாணவியுடன் பங்கேற்ற பூனைக்கு பாராட்டு தெரிவித்த பல்கலைக்கழகம்!

ச. முத்துகிருஷ்ணன்

ஜூம் மூலம் நடைபெற்ற எல்லா ஆன்லைன் வகுப்புகளிலும் மாணவியுடன் பங்கேற்ற பூனைக்கு பட்டமளிப்பு விழாவின் போது அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று சிறப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பிரான்செஸ்கா போர்டியர் என்ற மாணவி சமீபத்தில் பட்டம் பெற்றார். இருப்பினும், இந்த மைல்கல்லை அவர் தனியாக அடையவில்லை. சுகி என்று பெயரிடப்பட்ட அவரது அபிமான செல்லப் பூனையும் மாணவியுடன் இணைந்து அனைத்து ஆன்லைன் வகுப்புகளிலும் பங்கேற்றது.

பிரான்செஸ்கா போர்டியர், பட்டமளிப்பு விழாவிற்கு ஆடை அணிந்திருந்த அவரது மற்றும் அவரது பூனையின் படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "எனது பூனை ஒவ்வொரு ஜூம் விரிவுரையிலும் கலந்து கொண்டது, எனவே நாங்கள் இருவரும் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவோம்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்தப் பதிவு வைரலானதை அடுத்து பல இணைய பயனர்கள் சுகி மற்றும் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் மாணவி படித்த டெக்ஸாஸ் பல்கலைக்கழகமும் அவரது பதிவிற்கு பதிலளித்துள்ளது. "உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்" என்று பல்கலைகழகம் அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளது.