உலகம்

துப்பு கொடுத்தால் 2.7 கோடி சன்மானம் - இந்திய பெண் கொலை வழக்கில் ஆஸ். போலீஸ் அறிவிப்பு

EllusamyKarthik

கடந்த  2014 ஜனவரியில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து 40 கிலோ மீட்டர் மேற்கே அமைந்துள்ள வெஸ்ட் ஹாக்ஸ்டான் பகுதியின் புதர் காட்டில் இருந்து முகம் மற்றும் உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன் ஒரு பெண் மீட்கப்பட்டார்.

உடனடியாக அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டது. சுமார் 28 நாட்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அந்த பெண். 

போலீசாரின் விசாரணையில் உயிரிழந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த 39 வயதான மோனிகா ஷெட்டி என கண்டறியப்பட்டது. அவர் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். 

ஐந்து முதல் பத்து நாட்கள் வரை அவரது முகம் அமிலத்தில் முக்கி எடுக்கப்பட்டதால் அவர் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் இந்த வழக்கு குறித்து விசாரித்ததில் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. இதுவரை எந்த முகாந்திரமும் இல்லாத இந்த வழக்கை சரியான வழியில் விசாரணை மேற்கொள்வதற்காக நியூ சவுத் வேல் அரசு இந்த வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 5 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் சன்மானமாக கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த வழக்கில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்ந்து துப்பு கிடைக்கும் என போலீசார் நம்புவதாக தெரிவித்துள்ளனர்.