உலகின் பிஸியான நீர் வழித்தடங்களில் ஒன்று சூயஸ் கால்வாய். எகிப்தில் அமைந்துள்ள இந்த கால்வாயில் குறுக்கு பக்கமாக தரை தட்டி நின்ற எவர் கிவன் என்ற சரக்கு கப்பல் மிதக்கும் நிலைக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புக் குழு உறுதி செய்துள்ளது.
மலேசியாவிலிருந்து நெதர்லாந்துக்கு எவர் கிவன் என்ற ஜப்பான் நாட்டு சரக்கு கப்பல் 20 ஆயிரம் பெட்டகங்களுடன் சென்று கொண்டிருந்தது. அக்கப்பல் கடந்த 23 ஆம் தேதி எகிப்தை ஒட்டியுள்ள சூயஸ் கால்வாயை கடக்கும் போது குறுக்காக திரும்பி மேற்கொண்டு செல்ல இயலாமல் சிக்கிக் கொண்டது. இதனால் சர்வதேச சரக்கு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் கப்பலை மீட்கும் முயற்சிகள் நடந்தன.
கப்பலின் அடிப்பகுதியில் உள்ள மணல் பகுதியை தோண்டி அதை வெளியே இழுப்பதற்காக 12 இழுவை படகுகள் பணியாற்றி வரும் நிலையில் அது போன்ற மேலும் 2 படகுகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இது வரை 20 ஆயிரம் டன் மணல் அகற்றப்பட்டுள்ள நிலையில் இம்முயற்சி வெற்றிபெறாவிட்டால் கப்பலுக்கு உள்ளே உள்ள சரக்குகளை வெளியில் எடுத்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என சூயஸ் கால்வாய் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கப்பலை மீட்கும் பணி எவ்வளவு நாளாகும் என்பதை இப்போது சொல்ல முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே கடும் காற்றால் கப்பல் திசை திரும்பி சிக்கியதாக கூறப்பட்ட நிலையில் மனித தவறு அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்க கூடுமோ என்ற கோணத்திலும் விசாரணைகள் தொடங்கியுள்ளன. உலகின் சரக்கு போக்குவரத்தின் மையப் புள்ளியாக திகழும் சூயஸ் கால்வாய் அடைபட்டுள்ள நிலையில் இதன் இரு புறமும் சுமார் 320 கப்பல்கள் அதை கடந்து செல்வதற்காக காத்துக்கிடக்கின்றன. சில கப்பல்கள் ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றிக்கொண்டு செல்லத் தொடங்கிவிட்டன.
இந்நிலையில் இந்த சரக்கு கப்பல் மீண்டும் மிதக்க தொடங்கியுள்ளதால் கப்பல் போக்குவரத்து சூயஸ் கால்வாயில் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.