உலகம்

இதை பொய் என்றே நினைத்தார்கள்: சைக்கிள் மோதி நெளிந்த கார்!

webteam

கார் மீது சைக்கிள் மோதினால், ’ஐயையோ, சைக்கிள் காலிதானே’ என்றுதான் கேட்பார்கள் எல்லோரும். ஆனால், அப்படியே உல்டாவாக நடந்திருக்கிறது சீனாவில். சைக்கிள் மோதி காரின் முன்பகுதி சேதமாகி இருக்கிறது!
அவ்வளவு ஸ்ட்ராங் சைக்கிளா அது?

தெற்கு சீனாவில் உள்ள ஷென்சன் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், வழக்கம் போல தனது சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென்று கார் ஒன்றின் முன் பக்கத்தில் அவர் சைக்கிள் நேருக்கு நேராக மோதிவிட்டது. சைக்கிளில் வந்தவர் கீழே விழுந்து படுகாயம் அடைந் திருப்பார் என்று நினைத்திருந்தால், அதை மாற்றிக்கொள்ளுங்கள். அந்த இளைஞருக்கு லேசான காயம்தான். ஆனால், எதிர்பாராதவிதமாக காரி ன் முன் பகுதி வளைந்து நெளிந்துவிட்டது. 

காரை ஓட்டி வந்தவருக்கு அதன் சேதத்தை விட, சைக்கிள் மோதி கார் எப்படி நெளிந்தது என்கிற ஆச்சரியம்தான் அதிகம் கவலைக்கொள்ள வைத்தது. விவகாரம் போலீஸுக்கு சென்றது. அவர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, இந்த புகைப்படம் சீன சமூக வலைத்தளங்களில் வைரலானது. பெரும்பாலானவர்கள் இதை நம்பவில்லை. கிராபிக்ஸ் என்றே நினைத்தார்கள்

உடனடியாக களத்தில் இறங்கிய போலீஸ், ‘’அது பொய்யில்லை. உண்மையான விபத்துதான். கார் சேதமடைந்ததை பாருங்க’’ என விளக்கம் அளித்து, அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

ஆஹா... ஆஹா... ஆஹஹஹா!