தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் தண்ணீர் ரேசனில் விநியோகிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான கேப்டவுன் உலகிலேயே தண்ணீர் தீர்ந்து போகும் நகரமாக விரைவில் அறியப்படவுள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக மழை குறைந்ததால், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரும் கேப்டவுன் நகரம், தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. கேப் டவுனில், நான்கு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு ஒருவரது தினசரி தேவைக்காக, 87 லிட்டர் தண்ணீர் ரேசனில் வழங்கப்படுகிறது. பிப்ரவரி முதல் வாரத்திலிருந்து இது 50 லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நகர மக்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.
இதுதொடர்பாக கூறும் அந்நகர மக்கள், “குளிப்பதற்கு குறைந்த அளவில் தண்ணீர் எடுத்துக் கொள்கிறோம். குழாயில் தண்ணீர் வரவில்லை என்பதால் தெரு முனையில் இருக்கும் தொட்டியில் இருந்து வாளி மூலம் தண்ணீர் எடுத்துக் கொள்கிறோம். கழிப்பறைக்கும் இதே தண்ணீரை பயன்படுத்துகிறோம். மூன்று ஆண்டுகளாக கேப்டவுனில் போதிய மழை பெய்யாததால், பெரும்பாலான நீர் நிலையங்கள் வற்றி விட்டன. இதனால் நீர் மக்களின் தேவைக்கு ஏற்ப திறந்து விடப்படுகிறது. மழை மீண்டும் கேப்டவுனில் பெய்யும்வரை, வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் யாரும் 2 நிமிடத்திற்கு மேல் ஷவரில் குளிக்கக் கூடாது. கார் சுத்தப்படுத்துதல், நீச்சல் குளம் மற்றும் வீட்டுத் தோட்டங்களுக்கு தண்ணீர் பயன்படுத்தப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக தண்ணீர் பிரச்னை குறித்து அரசு எச்சரிக்கை விடுத்தது. தண்ணீர் சிக்கனம் குறித்து அரசின் அறிவிப்பை நாங்கள் அலட்சியப்படுத்திவிட்டோம். முன்கூட்டியே கடுமையான கட்டுப்பாடு விதித்திருந்தால் நாங்கள் பொறுப்புடன் செயல்பட்டிருப்போம்” என்று கூறுகின்றனர்.