model image
model image twjtter
உலகம்

அறுவைசிகிச்சை செய்த ரோபோ.. கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண் பலியான சோகம்.. நஷ்டஈடு கேட்ட கணவர்!

Prakash J

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஹார்வி சுல்ட்ஸெர். இவரது மனைவி சாண்ட்ரா. இவருடைய பெருங்குடலில் ஏற்பட்ட புற்றுநோய்க்குச் சிகிச்சையளிக்கப்பதற்காக, பாப்டிஸ்ட் ஹெல்த் போகா ரேடன் என்ற மருத்துவமனையில் சேர்த்தார். அங்கே, சாண்ட்ராவுக்கு அறுவைசிகிச்சை மூலம் புற்றுநோய் பாதிப்பை அகற்றுவதற்கான மருத்துவம் பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து, பல்வேறு கரங்கள் கொண்ட ’டா வின்சி’ என்ற மருத்துவ ரோபா மூலம் அறுவைசிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி சாண்ட்ராவின் பெருங்குடலில் பீடித்திருந்த புற்றுநோய், டா வின்சி எந்திரனின் மூலமாக அகற்றப்பட்டது. ஆனால் அந்த அறுவைசிகிச்சையின்போது எதிர்பாராவிதமாக, சிறுகுடலில் விழுந்த துவாரம் காரணமாக, சாண்ட்ரா மிகவும் பாதிப்புக்கு ஆளானார். புற்றுநோய் பாதிப்பு காரணமாக வாழ்நாளை எண்ணிவந்த சாண்ட்ரா, டா வின்சி ரோபோவின் தவறான அறுவைசிகிச்சையால் தற்போது உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, ஹார்வி சுல்ட்ஸெர் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி நீதிமன்ற வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ’ரோபோவால் செய்யப்பட்ட அறுவைசிகிச்சையின் விளைவாக தமது மனைவி இறந்துபோயுள்ளார்’ எனக் கூறியிருப்பதுடன், டா வின்சி ரோபோவின் பாதகங்கள் குறித்தும், அதன் தயாரிப்பு நிறுவனம் ரோபோவை முறையாக இயக்க வாய்ப்பில்லாத மருத்துவமனைகளுக்கும் அதனை விற்றது குறித்தும் தரவுகளோடு விளக்கி இருக்கிறார். மேலும் டா வின்சி இதற்கு முன்னதாக நடத்திய அறுவைசிகிச்சைகளால் நிகழ்ந்த மரணங்கள் தொடர்பான விசாரணையும் கோரியிருக்கிறார். மேலும், டாலர் 75000 (இந்திய மதிப்பில் ரூ.62,27,145) கேட்டு நஷ்டஈடும் கோரியுள்ளார்.

ஹார்வியின் மனைவிக்கு புற்றுநோய் அறுவைசிசிச்சை கடந்த 2022 பிப்ரவரி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. ரோபோ உதவியுடன் நடத்தப்பட்ட மருத்துவ அறுவைசிகிச்சையில் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.