உலகம்

இலங்கையில் விவசாயக் கடன்கள் ரத்து - இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!

webteam

இலங்கையில் இரண்டு ஏக்கருக்கும் குறைவான நிலத்தில் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

இலங்கை இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்கநாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், பொதுமக்களின் பல சிக்கல்களுக்கும் தீர்வு காணும் வகையில் 19ஆவது சட்டத்திருத்தம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். நாட்டில் மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளதுடன், எரிவாயு தட்டுப்பாட்டைத் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். டீசல் விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல் விநியோகம் இம்மாதம் 21ஆம் நாள் முதல் மீண்டும் தொடங்கும் என்றும் அறிவித்தார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாகவும், இரண்டு ஏக்கருக்கும் குறைவான வயல்களில் நெல் பயிரிட்டோருக்கான கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.