ட்ரம்ப், மார்க் கார்னி எக்ஸ் தளம்
உலகம்

”அமெரிக்காவுடன் பழைய உறவு முடிந்துவிட்டது” - கனடாவின் புதிய பிரதமராக தேர்வான மார்க் கார்னி!

”அமெரிக்காவுடன் பழைய உறவு முடிந்துவிட்டது” என கனடாவின் புதிய பிரதமராக தேர்வான மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

Prakash J

கனடாவில், சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் 43.4 லிபரல் கட்சியைச் சேர்ந்த மார்க் கார்னி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் தொடர்ந்து 4-வது முறையாக லிபரல் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நிலையில் கனடாவின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலுக்கு மத்தியில், வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்திருந்தார். ”எதிர்காலத்தில் சந்திப்போம்” என ட்ரம்ப் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

ட்ரம்ப், மார்க் கார்னி

இந்த நிலையில், தேர்தலில் வெற்றிபெற்ற மார்க் கார்னி, “கனடாவில் பிரிவினையை ஏற்படுத்தும் அமெரிக்க அதிபா் டொனால்டு ட்ரம்ப்பின் விருப்பம் நிறைவேறவில்லை’ எனத் தெரிவித்துள்ளார். அவர், ”கனடா மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, அதன்மூலம் நாட்டை சொந்தமாக்கிக் கொள்ள ட்ரம்ப் விரும்பினாா். ஆனால் அந்த விரும்பம் ஒருபோதும் நிறைவேறாது என்பதை இந்தத் தோ்தல் முடிவு காட்டியுள்ளது. அமெரிக்காவின் துரோகச் செயல்களால் நாம் அதிா்ந்துபோயுள்ளோம்.

ஆனால், அதில் இருந்து கிடைத்துள்ள படிப்பினையை ஒருபோதும் மறக்க மாட்டோம். இதுவரை சா்வதேச நாடுகளின் வா்த்தக நடவடிக்கைகள் அமெரிக்காவை மையப்படுத்தி ஒருங்கிணைந்தவையாக இருந்தன. ஆனால், அத்தகைய சூழலுக்கு முடிவு வந்துவிட்டது. இனி பிற நாடுகளை மையப்படுத்தி கனடாவின் வா்த்தக உறவு மறுகட்டமைப்பு செய்யப்படும். இந்த வெற்றி, நாட்டுக்கும் நாட்டின் ஜனநாயகத்துக்கும் கிடைத்துள்ள வெற்றி. இனி பழைய பகையை மறைந்து கட்சி பாகுபாடின்றி நான் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்ப், கனடா அமெரிக்காவின் மற்றொரு மாகாணமாக இணைய வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவை கவர்னர் என ட்ரம்ப் அழைத்தார். இது இருநாட்டு உறவுகளிடையே விரிசலை அதிகரித்து. மேலும், ட்ரம்பின் அதிக வரிவிதிப்பும் அதற்குக் காரணமாய் அமைந்தது.

மார்க் கார்னி

இதையடுத்து கனடாவில் லிபரல் கட்சியின் செல்வாக்கு சரிந்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ, பிரதமர் பதவியில் இருந்து விலகி மார்க் கார்னியை பிரதமராக்கினார். கட்சிக்குள் நிலவிய உட்பூசல், வாக்காளா்களிடையே ட்ரூடோ மீது நிலவிய அதிருப்தி போன்றவை லிபரல் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று கருதப்பட்டது. ஆனால், ட்ரம்ப்பின் வரிவிதிப்பு மற்றும் கனடாவின் இறையாண்மைக்கு எதிரான அவரது அச்சுறுத்தல்களுக்கு எதிராக மாா்க் காா்னி மேற்கொண்ட தீவிர பிரசாரம் தோ்தலில் லிபரல் கட்சியின் வெற்றிக்குக் கைகொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.