கனடா தனது வரலாற்றிலேயே மிக மோசமான கால கட்டத்தை கடந்து வரும் நிலையில் அதை வழிநடத்திச்செல்லும் சவாலான பொறுப்பு புதிய பிரதமர் மார்க் கார்னிக்கு கிடைத்துள்ளது. கனடாவை 51ஆவது மாநிலமாக்கிக்கொள்வேன், எல்லைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக்கூறி வரும் அண்டை நாட்டு அதிபர் ட்ரம்ப் இறக்குமதி வரிகளையும் அதிகரித்துள்ளார்.
உள்நாட்டில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட கடும் அதிருப்திகளை ஆளும் லிபரல் கட்சி எதிர்கொண்டு வருகிறது. மறுபுறம் இந்தியா போன்ற பல வெளிநாடுகளுடனான உறவுகளும் சீர்குலைந்துள்ளன.
இந்த நிலையில்தான் கார்னியின் வருகை அமைந்துள்ளது. 59 வயதான மார்க் கார்னி இதற்கு முன் அரசுப்பதவிகள் எதையும் வகித்தவர் அல்ல... அரசியல்வாதியும் அல்ல... அவர் ஒரு வங்கியாளர். பேங்க் ஆஃப் கனடாவின் ஆளுநராக இருந்துள்ள கார்னி, 2008இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி புயலில் இருந்து தங்கள் நாடு தப்ப உதவியவர். பேங்க் ஆஃப் இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் பதவி வகித்த முதல் வெளிநாட்டவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. ட்ரம்ப்பை கடுமையாக விமர்சிப்பவர் கார்னி. ட்ரம்ப் ஒரு போதும் தங்களை வெற்றிகொள்ள அனுமதிக்கமாட்டோம் என திட்டவட்டமாக கூறியுள்ளார் கார்னி. அமெரிக்கர்கள் தங்களுக்கு உரிய மரியாதை தரும் வரை பதிலடி தந்துகொண்டே இருப்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.
மறுபுறம் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ட்ரூடோ ஆதரவு அளித்து வந்ததில் இந்தியாவின் எதிர்ப்பை சம்பாதித்த நிலையில் கார்னி என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவேன் என்று அண்மையில் மார்க் கார்னி கூறியிருந்ததும் கவனம் பெறுகிறது.