தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மறுத்துள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சரவையில் 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல், வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றினையும் கொண்டு வந்தார். பெண்களுக்கான பிரச்னைகளில் தாமாக முன் வந்து குரல் கொடுப்பவர் என்ற பிம்பம் அவர் மீது உள்ள நிலையில், கடந்த ஒரு வார காலமாக பாலியல் புகார் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 18 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்த ஒரு புகார் தற்போது மீண்டும் துளிர்விட்டுள்ளது.
2000ம் ஆண்டில் ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பியேர் ட்ரூடோ கனடாவின் பிரதமராக இருந்தபோது கொலம்பியாவில் நடந்த இசை நிகழ்ச்சியில், 28 வயதான ஜஸ்டின் பங்கேற்றார். அதில் ஜஸ்டின் ட்ரூடோ பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம் தவறாக நடந்ததாக புகார் எழுந்தது. தனது அங்கங்களை ஜஸ்டின் பாலியல் ரீதியாக தொட்டார் என்று தமது புகாரில் அந்த பெண் கூறியிருந்தார்.
பல ஆண்டுகள் ஆன நிலையில், அந்த பெண் பத்திரிகையாளர் தற்போது அது குறித்து நாளிதழ்களில் எழுதியுள்ளார். இதனால் சர்ச்சை வெடித்துள்ளது. கனடா செய்திகளிலும் இது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
சர்ச்சைகள் குறித்து கடந்த வாரத்தில் முதன் முறையாக பேசிய ஜஸ்டின், “20 வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த சம்பவங்களை திரும்ப திரும்ப உங்களுக்கு ஞாபகப்படுத்தி சொல்லிக் கொண்டே இருக்கிறேன். நான் அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்றார். பின்னர் கடந்த வியாழக்கிழமை அன்று விளக்கம் எதுவும் அளிக்காமல் மன்னிப்பு மட்டும் கேட்டார்.