அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். சட்டவிரோத குடியேற்றம், விசா கட்டுப்பாடு, வரிவிதிப்பு நடைமுறைகள் எனப் பலவற்றிலும் அதிரடி காட்டி வருகிறார். ஏற்கெனவே கனடா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு வரிவிதிப்பை அதிகப்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த வரிவிதிப்பும், அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. இதற்குப் பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ”அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் இடையிலான ஆழமான பொருளாதார, பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவுகளின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது” என புதிதாகப் பதவியேற்ற கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "நமது பொருளாதாரங்களின் ஆழமான ஒருங்கிணைப்பு மற்றும் இறுக்கமான பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பின் அடிப்படையில் அமெரிக்காவுடன் கனடா கொண்டிருந்த பழைய உறவு முடிந்துவிட்டது. அமெரிக்காவில் அதிகபட்ச தாக்கத்தையும் கனடாவில் குறைந்தபட்ச தாக்கங்களையும் ஏற்படுத்தும் வர்த்தக நடவடிக்கைகளுடன் நாங்கள் அமெரிக்க வரிகளை எதிர்த்துப் போராடுவோம்" என எச்சரித்துள்ளார்.
மேலும், கனடா அதன் தெற்கு அண்டை நாடுகளுடன் பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள கார்னி, ”கனடா-அமெரிக்காவின் பாதுகாப்பு, வர்த்தக உறவுகள் குறித்த பரந்த மறுபரிசீலனைக்கு ஒரு நேரம் வரும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.