கடந்த 2016ஆம் ஆண்டு X (முன்னர் ட்விட்டர்) தலைமை நிர்வாகியான எலான் மஸ்க், ’நியூராலிங்க்’ எனப்படும் நரம்பியல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை உருவாக்கினார். இந்நிறுவனம் மனித எண்ணங்களை செயல்களாக மாற்றக்கூடிய மூளை மற்றும் கணினிக்கு இடைமுகமாக செயல்படக்கூடிய மைக்ரோ சிப்பை (Brain-Computer interface) உருவாக்குவதில் கவனம் செலுத்திவருகிறது.
அதாவது கணினிகள் போன்ற வெளிப்புற சாதனங்களைக் கட்டுப்படுத்தவும், இழந்த மூளை செயல்பாடுகளை மீட்டெடுக்கவும் பயன்படுத்தக்கூடிய BCI-ஐ உருவாக்குவதே நியூராலிங்க் நிறுவனத்தின் குறிக்கோளாக இருந்துவருகிறது. இதன் மூலம் உடல் பாகங்கள் செயலிழந்து போன மனிதர்கள் பயன்பெறுவார்கள் எனவும், உடல் பருமன், மன இறுக்கம், மனச்சோர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மனிதர்களும் பயனடைவார்கள் எனவும் நியூராலிங்க் கூறிவருகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு விலங்குகள் மீது பயன்படுத்தும் ஆராய்ச்சியை செய்த நீயூராலிங்க், ஒரு குரங்கின் மனதுடன் கணினி கர்சரைக் கட்டுப்படுத்தப் பயன்படும் BCI-ஐ பயன்படுத்தி வெற்றிகரமாக நிரூபித்துக்காட்டியது. அதைத்தொடர்ந்து மனிதர்களின் மூளைக்குள் மைக்ரோசிப் பொருத்தும் ஆராய்ச்சியை கடந்த ஆண்டு செய்து முடித்தது. அதுதொடர்பாக பல்வேறு பதிவுகளை எலான் மஸ்க் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருந்தார்.
அமெரிக்காவில் ஏற்கனவே இரண்டு மனிதர்களுக்கு சோதனை முயற்சிகளை நியூராலிங்க் நிறுவனம் முடித்துள்ள நிலையில், கனடாவிலும் சோதனை முயற்சியை மேற்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தது. நீண்ட நாட்கள் காத்திருக்க வைத்தநிலையில், தற்போது கனடா அரசு நியூராலிங்கின் சோதனை முயற்சிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் நேற்று இச்செய்தியை அறிவித்த நியூராலிங்க் "ஒரு நாள் எங்கள் தொழில்நுட்பம் பலருக்கு உதவுவதற்கு இது ஒரு முக்கியமான முதல் படி" என்று தெரிவித்துள்ளது.
மக்கள் தங்கள் எண்ணங்களுடன் கணினி கர்சர் அல்லது கீபோர்டைக் கட்டுப்படுத்த மூளையில் வைக்கப்படும் மைக்ரோசிப் உதவுகிறது. ஸ்மார்ட் பிரைன் என அழைக்கப்படும் மூளைக்குள் வைக்கப்படும் BCI சிப்பானது மூளையின் மின் செயல்பாடு மற்றும் எக்ஸ்டர்னல் டிவைஸ் இரண்டையும் இணைக்கப்பயன்படுகிறது. ஒயர்லஸ் மைக்ரோசிப்பான இது மூளையின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் பகுதியில் ரோபாட் உதவியின் மூலம் பொறுத்தப்படுகிறது. BCI ஆனது மனித அறிவாற்றல் மற்றும் உணர்திறன் செயல்பாடுகளை ஆராய்ச்சி செய்தல், மேப்பிங் செய்தல், சரி செய்தல் போன்ற வேலைகளை செய்கிறது. கிட்டதட்ட 6 மாதங்கள் இதற்கு தேவைப்படும்.