உலகம்

எனது வாழ்நாளில் ரணிலை பிரதமராக நியமிக்கப் போவதில்லை - அதிபர் சிறிசேன

webteam

தமது வாழ்நாளில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கப் போவதில்லை என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை கடந்த அக்டோபர் மாதம் அதிரடியாக பதவி நீக்கம் செய்த அதிபர் சிறிசேன,  ராஜபக்சவை புதிய பிரதமராக தேர்வு செய்தார். அவரை பிரதமராக நியமிக்க சிறிசேனாவுக்கு அதிகாரம் இல்லை எனவும் தானே பிரதமராக நீடிப்பதாகவும் ரணில் தெரிவித்தார். மேலும் தனக்கு பெரும்பான்மை இருப்பதாகவும் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

 இதையடுத்து, ராஜபட்சவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிந்த நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக சிறிசேனா அதிரடியாக அறிவித்தார். ஆனால், ரணில் தரப்பினர் நீதிமன்றத்தை நாடினர். இலங்கை உச்சநீதிமன்றம், அதிபர் சிறிசேனவின் நாடாளுமன்ற கலைப்பு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து கூட்டப்பட்ட இலங்கை நாடாளுமன்ற குரல் வாக்கெடுப்பில் ராஜபக்ச தரப்பு தோல்வி அடைந்ததாக சபநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார். ஆனால் அதிபர் சிறுசேன வாக்கெடுப்பை ஏற்க மறுப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் இலங்கையில் செய்தியாளர்களை சந்தித்த சிறிசேன,‌ ஊழல் காரணமாகவே ரணில் விக்ரமசிங்க, அக்டோபர் 26 ஆம் தேதி பதவியிலிருந்து நீக்கியதாக தெரிவித்தார். தாம் பிரதமர் பதவியில் அமர்த்தும் நபர், தம்முடன் இணைந்து செயற்படக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும் எனக் கூறிய சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவுடன் தம்மால் இணைந்து செயல்பட முடியாது என்றும் தெரிவித்தார். இதுகுறித்து விசாரணை நடத்த குழு ஒன்றை நியமித்துள்ளதாக சிறிசேன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தாலும் ரணில் விக்ரமசிங்கவை தமக்கு முன்பாக அழைத்துவர வேண்டாம் என அக்கட்சியினருக்கு அறிவித்துள்ளதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.