california earthquake x
உலகம்

கலிபோர்னியாவை உலுக்கிய நிலநடுக்கம்! விமான தரையிறக்கத்தில் நடந்த ட்விஸ்ட்! வைரலாகும் வீடியோ!

அடுத்தடுத்து ஏற்பட்ட நில அதிர்வுகளால் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணமே அதிர்ந்துள்ளது. விமான நிலையத்திலும் கண்ணாடிகள் உடைந்ததுடன், தரையிறங்க முயன்ற விமானம் கடைசி நேரத்தில் மீண்டும் வானில் பறக்க அறிவுறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளால் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணமே அதிர்ந்துள்ளது. விமான நிலையத்திலும் கண்ணாடிகள் உடைந்ததுடன், தரையிறங்க முயன்ற விமானம் கடைசி நேரத்தில் மீண்டும் வானில் பறக்க அறிவுறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி அமெரிக்காவில் என்ன நடந்தது? நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் என்னென்ன? விரிவாகப் பார்க்கலாம்...

california earthquake

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகே உள்ள மன்ஹாட்டன் பீச் கடற்கரைப் பகுதியில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், சுமார் 12 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் அடுத்தடுத்து நில அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகள் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. இதனால், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கியதுடன், வீடுகள் மற்றும் கடைகளில் இருந்த பொருட்களும் கீழே விழுந்துள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் ஹெர்மோசா பீச்சில் அமைந்துள்ள ஒரு மளிகைக் கடையில் நூற்றுக்கணக்கான ஒயின் மற்றும் மதுபான பாட்டில்கள் தரையில் விழுந்து உடைந்துள்ளன. இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதற்கிடையே, லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திலும் நிலநடுக்கத்தின் தாக்கம் எதிரொலித்துள்ளது. விமான நிலையத்தின் ஒரு பகுதியில் இருந்த கண்ணாடிகள் உடைந்து சிதறியதுடன், பயணிகள் நடந்து செல்லும் நடைபாதையின் ஒரு பகுதியும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கம் ஏற்பட்ட அதே நேரத்தில் ஓடுபாதையை நோக்கித் தரையிறங்க வந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றை, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி கடைசி நேரத்தில் தரையிறங்க அனுமதிக்காமல் மீண்டும் மேலே பறக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, அந்த விமானம் மீண்டும் வானில் சுற்றி வந்து பின்னர் தரையிறங்கியுள்ளது.

Earthquake

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ அல்லது பெரிய அளவிலான கட்டடச் சேதங்களோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அடுத்தடுத்து ஏற்பட்ட நில அதிர்வுகளால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.