Russian Shadow fleet web
உலகம்

1 இந்தியர் உட்பட 25 மாலுமிகள் கைது | ரஷ்யக் கப்பலை கைப்பற்றிய பிரிட்டிஷ் ராணுவம்!

ஆங்கிலக் கடலில் (English Channel) நடு இரவில் நடத்திய அதிரடிச் சோதனையில், பெயர் மாற்றி போலிக் கொடியுடன் இயங்கிய ‘ஸ்மிர்டோஸ்’ கச்சா எண்ணெய் டேங்கர் கப்பலை பிரிட்டிஷ் ராணுவம் முற்றுகையிட்டுக் கைப்பற்றியுள்ளது.

PT WEB

பிடிபட்ட கப்பல் மீது ஜூலை 2025இல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், அது தனது பெயரை 'Myrtos' என்பதிலிருந்து 'Smyrtos' என மாற்றிக்கொண்டதுடன், தான் பறக்கவிடும் கொடியையும் இருமுறை மாற்றியுள்ளது.

கேமரூன் நாட்டின் போலிக் கொடியுடன், ரஷ்யாவின் உஸ்ட்-லுகா துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெய்யைக் கடத்தி வந்த ‘ஸ்மிர்டோஸ்’ ((SMYRTOS) கப்பல் பிரிட்டனின் கடல் எல்லைக்குள் நுழைந்தபோது வளைத்துப் பிடிக்கப்பட்டது. ரஷ்யா இயக்கிவரும் கச்சா எண்ணெய் கடத்தல் கப்பல்களை (Shadow Fleet) பிடிக்கும் நோக்கில், பிரிட்டிஷ் ஆயுதப் படைகள் ஆங்கிலக் கடலில் (English Channel) நள்ளிரவில் இந்த அதிரடிச் சோதனையை நடத்தியது. சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த ராணுவ நடவடிக்கையில், பிரிட்டிஷ் கடற்படையின் எச்.எம்.எஸ் சதர்லேண்ட் (HMS Sutherland) போர்க்கப்பல், அதிநவீன ஹெலிகாப்டர்கள் மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸின் பி-8 (P-8 Poseidon) உளவு விமானங்கள் என ஒட்டுமொத்த பாதுகாப்புப் படைகளும் ஈடுபடுத்தப்பட்டன.

russian shadow fleet

பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மரின் நேரடி உத்தரவின் பேரில், பிரிட்டனின் ‘ராயல் மரைன் கமாண்டோக்கள்’ (Royal Marine Commandos) மற்றும் தேசிய குற்றவியல் முகமை (NCA) அதிகாரிகள் இணைந்து ‘ஸ்மிர்டோஸ்’ (SMYRTOS) என்ற ரஷ்ய (நிழல் உலக) கச்சா எண்ணெய் கடத்தும் டேங்கர் கப்பலை நடுக் கடலில் அதிரடியாக முற்றுகையிட்டு, அதில் இருந்த 1 இந்திய மாலுமி உட்பட 25 மாலுமிகளையும் கைது செய்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த அதிரடி நடவடிக்கை குறித்துப் பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது X தளத்தில், ரஷ்ய அதிபர் புதினின் சட்டவிரோதப் போருக்கு நிதி திரட்டும் இந்த நிழல் உலகக் கப்பல் போக்குவரத்து (கச்சா எண்ணெய் கடத்தல்) மீது நாங்கள் நடத்தியுள்ள இந்தத் தாக்குதல், ரஷ்யாவிற்கு விழுந்த மிகப்பெரிய பலத்த அடியாகும்; உக்ரைன் போருக்கு உதவுபவர்கள் எங்குமே மறைந்து வாழ முடியாது என்பதை இந்த ஆபரேஷன் நினைவூட்டுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

Russian Shadow fleet

உக்ரைன் போரின் நிதி ஆதாரமாக விளங்கும் இத்தகைய நிழல் கப்பல்களை முடக்குவதில் பிரிட்டன் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்தக் கப்பலில் தனது எண்ணெய் ஏற்றுமதி மீது சர்வதேசத் தடைகள் விதிக்கப்பட்டிருப்பதால் ரகசியமாக ரஷ்யா ஒரு நிழல் கப்பல் படையை - (கச்சா எண்ணெய் கடத்தல்) (shadow fleet) கடலிலேயே இயக்கி வருகிறது. இந்த நிழல் கப்பல் படையில் 700-க்கும் மேற்பட்ட கப்பல்கள் இருக்கின்றன என்றும் இவை தடைக்குள்ளான ரஷ்ய எண்ணெயில் 75 சதவீதத்தைக் கொண்டு செல்கிறது என்றும் கூறப்படுகிறது. மேலும் ரஷ்யாவின் மிக முக்கியமான வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது.