வாக்குரிமை என்பது நவீன ஜனநாயக சமுதாயத்தின் ஊடாக உருவான ஒன்று. தனிநபர்கள் அவர்களது குடும்பம் உச்சபட்ச அதிகாரத்துடன் ஆட்சி செய்து வந்த மன்னராட்சி காலத்தில் விடுபட்ட பின்னர் ஜனநாயக தன்மையிலான அரசுகள் உருவானது. இந்த ஜனநாயக அரசுகளில் தான் மக்கள் தங்களுக்கான அரசை தாங்களே தேர்வு செய்துகொள்ள தேர்தல்கள் நடத்தப்பட்டன. அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஜனநாயக கோட்பாடுகளின் அடிப்படையில் 18ம் ஆண்டு நூற்றாண்டில் மக்களாட்சிக்கான விதைகள் விதைக்கப்பட்டன.
1700-களில் தான் முதன் முதலில் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் ஜனநாயகத்தின் ஒரு அம்சமாக வாக்குரிமை முறை கொண்டு வரப்பட்டது. ஆனால், வாக்குரிமை என்பது எல்லோருக்கும் அளிக்கப்படவில்லை. வெள்ளையின ஆண் நிலப்பிரபுகளுக்கே அமெரிக்காவில் முதலில் வாக்குரிமை இருந்தது. அதேபோல்தான் உலகம் முழுவதுமே தொடக்கத்தில் பணம் படைத்த மேல்தட்டு வர்க்கத்தினருக்கே வாக்குரிமை கொடுக்கப்பட்டது. மெல்ல மெல்ல தான் அனைவருக்கும் வாக்குரிமை என்ற இலக்கை நோக்கி உலகம் நகர்ந்தது. நியூசிலாந்தில் தான் முதன்முதலாக அனைவருக்கும் வாக்குரிமை 1893-ல் வழங்கப்பட்டது. இந்தியாவில் சுதந்திரம் அடைந்த பிறகுதான் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. அதற்கு முன்பு பிரிட்டீஷ் காலத்தில் நடந்த தேர்தல்களில் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்படவில்லை.
இதுஒருபுறம் இருக்க வாக்கு செலுத்துதற்கான குறைந்தபட்ச வயதும் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரி இருக்கவில்லை. பெரும்பாலான நாடுகளில் 18 வயதே வாக்குரிமைக்கான குறைந்தபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குறைந்தபட்சம் 16 முதல் அதிகபட்சம் 25 வரை சில நாடுகளில் வாக்குரிமை வித்தியாசப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்டில் தான் வாக்குரிமைக்கான தொடக்க வயது 25 ஆக உள்ளது.
சிங்கப்பூர், லெபனான், ஓமன், குவைத், சமோயா, டொங்கா, டொகெலாயு ஆகிய நாடுகளில் 21 வயதாகவும், கேமரூன், தைவான், பஹ்ரைன், நவுரு ஆகிய நாடுகளில் 20 வயதாகவும் உள்ளது. சாலமோன் தீவுகளில் 19 ஆக உள்ளது. இதன் பிறகு இந்தோனேஷியா, வடகொரியா, க்ரீஸ், டிமொர் - லெஸ்டி ஆகிய நாடுகளில் வாக்குரிமை வயது 17.
பிரேசில், அர்ஜெண்டினா, ஈக்குவடார், க்யூபா, ஆஸ்திரியா, நிக்கரகுவா, மல்டா, ஜெர்சே, இஸ்லே ஆஃப் மேன், குவர்ன்சே ஆகிய நாடுகளில் வாக்குரிமை வயது 16 ஆக உள்ளது. ஆப்கானிஸ்தானில் மட்டும் தேர்தல் நடப்பதில்லை.
வாக்குரிமை வயது தொடர்பாக முழு தகவலை பெற.. https://worldpopulationreview.com/country-rankings/voting-age-by-country இந்த இணையத்தில் பார்க்கவும்..
வாக்குரிமைக்கான ஆரம்ப வயதை 16 ஆக குறைக்க பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பரிந்துரையை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. 2024 பொதுத் தேர்தலில் 59.7 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவானதால் பிரிட்டன் அரசு இந்த முடிவுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பிரிட்டர் துணை பிரதமர் ஏஞ்சலா ராய்னெர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரிட்டர் ஜனநாயகத்தில் இன்னும் அதிகப்படியான மக்கள் பங்கெடுக்கும் வகையில் அதற்கு தடையாக உள்ள விஷயங்களை விலக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.