பிரிட்டனில் சைக்கிள் உடற்பயிற்சி இயக்கத்தை அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது அவர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹீரோ சைக்கிளை ஓட்டி அசத்தியது தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பிரிட்டன் முடங்கி போயிருக்கிறது. அங்கு 25 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உடற்பயிற்சியை ஊக்குவிக்கும் விதமாக சைக்கள் உடற்பயிற்சி இயக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த இயக்கத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிமுகம் செய்து நம் நாட்டில் தயாரான "ஹீரோ வைக்கிங்" சைக்கிளை ஓட்டிச் சென்றார்.
இந்த ஹீரோ சைக்கிள் மான்செஸ்டரில் வடிவமைக்கப்பட்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் தாய் நிறுவனம் இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டுள்ள ஹீரோ மோட்டார்ஸ். இந்நிகழ்ச்சியில் பேசிய போரிஸ் ஜான்சன் "பொதுமக்கள் சுகாதாரமான காற்றைச் சுவாசிக்கவும், உடல்நலக் குறைபாடுகளில் இருந்து தப்பிக்கவும், கட்டுக்கோப்பான உடலமைப்பை பெறவும் சைக்கிளிங், வாக்கிங் ஆகியவை அவசியம் தேவைப்படுகிறது. இங்கிலாந்து தற்போது மிகப்பெரிய சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது" என்றார்.
இந்நிலையில் சைக்கிளை பிரதமர் போரிஸ் ஜான்சன் ஓட்டிச் சென்றது மிகவும் பெருமைக்குரிய தருணம் என்று ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் பங்கஜ் எம்.முஞ்சல் பெருமைப்பட தெரிவித்துள்ளார்.