பிரிட்டனில் கொரோனா தாக்குதலால் துவண்டு கிடக்கும் பொருளாதாரத்தை மீட்க 330 மில்லியன் பவுண்டு அதாவது இந்திய மதிப்பில் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் ஊக்கத் தொகையை அந்நாட்டு நிதியமைச்சர் ரிஷி சுனாக் அறிவித்துள்ளார்.
தொழில் நிறுவனங்களுக்கான கடன் உள்ளிட்ட வழிகளில் இந்நிதி செலவிடப்படும் என ரிஷி சுனாக் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்புகள் மருத்துவ ரீதியில் மட்டுமல்லாமல் பொருளாதாரத்தையும் வெகுவாக பாதித்துள்ளதாக ரிஷி சுனாக் தெரிவித்துள்ளார்.
போர் தவிர்த்த மற்ற காலங்களில் இது போன்ற பொருளாதார பாதிப்பை தங்கள் நாடு சந்திப்பது இதுவே முதல்முறை என்றும் ரிஷி சுனாக் தெரிவித்தார். மக்களின் வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் உறுதி செய்ய இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில் கண்ணுக்கு தெரியாத ஒரு எதிரியுடனான போரை பிரிட்டன் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதை சமாளிக்க நாடாளுமன்றத்தில் நாளை சிறப்பு சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார். பிரிட்டனில் இதுவரை 171 பேர் இறந்துள்ளனர். சுமார் ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.