பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று அதிகாலை முதல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட நிலவரத்தின்படி, ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மையைப் பெற திணறிக் கொண்டிருக்கிறது.
மொத்தம் 650 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் தற்போது வரை 613 இடங்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், பிரதமர் தெரசா மே-வின் கன்சர்வேடிவ் கட்சி 296 இடங்களை கைப்பற்றியிருக்கிறது. ஜெர்மி கார்பைனின் தொழிலாளர் கட்சி 251 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி அமைக்க 326 இடங்கள் தேவை.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து அடங்கிய பிரிட்டிஷ் பாராளுமன்றத்துக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த 2015 மே மாதம் நடந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்று டேவிட் கேமரூன் பிரதமராகப் பொறுப்பேற்றார். பிரெக்ஸிட் விவகாரம் காரணமாக அவர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2016 ஜூலை 13 ஆம் தேதி தெரசா மே பிரதமராகப் பதவியேற்றார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற ஆளும்கட்சிக்கு பெரும்பான்மை பலம் தேவை. எனவே முன் கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் தெரசா முன்மொழிந்தார். அதற்கு நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்தது. ஏற்கெனவே அறிவித்தபடி 650 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்துக்கு நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 4.6 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்களில் இந்திய வம்சாவளியினர் 15 லட்சம் பேர் உள்ளனர்.
ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் தெரசா மே பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டார். எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி சார்பில் அதன் தலைவர் ஜெரமி கார்பின் பிரதமர் வேட்பாளராக களம் கண்டார். இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று அதிகாலை முதல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
தலைநகர் லண்டன் மற்றும் மான்செஸ்டரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள், இந்தத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.