கச்சா எண்ணெய் விலை உயர்வு.. டாலரின் ஆதிக்கம்... மத்திய கிழக்கில் போர் பதற்றம்... இந்தச் சூழலில் உலகின் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்களும், மிகப்பெரிய நுகர்வோர்களும் ஒரே இடத்தில் ஒன்றிணைந்திருக்கின்றனர். அதுதான் BRICS மாநாடு. டெல்லியில் நடைபெற்று வரும் இந்த மாநாடு உலக அரங்கில் கவனம் பெற்றிருக்கிறது. காரணம், இந்த நாடுகள் இணைந்து புதிய எரிசக்தி வர்த்தக கட்டமைப்பை உருவாக்குமா? அப்படி உருவாக்கினால் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது...
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்த அமைப்பே BRICS என அழைக்கப்படுகிறது. தற்போது எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளும் இதில் இடம்பெற்றுள்ளன. BRICS-ன் முக்கியத்துவம் என்னவென்றால், ரஷ்யா, சவுதி அரேபியா, ஈரான் போன்ற உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களும், இந்தியா, சீனா போன்ற மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோர்களும் ஒரே கூட்டமைப்பில் இருப்பதுதான். இதனால் உற்பத்தி செய்வோர் முதல் நுகர்வோர் வரை, எண்ணெய் வர்த்தகத்தின் முக்கியமான பல பகுதிகள் BRICS நாடுகளுக்குள் வருகின்றன.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம், ஹார்முஸ் நீரிணை தொடர்பான பிரச்னை போன்ற காரணங்களால் உலக அளவில் எண்ணெய் விலை உச்சம் பெறத் தொடங்கியுள்ளது. இந்த சூழலை சமாளிப்பதற்கான முயற்சிகளும் BRICS மாநாட்டில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், BRICS நாடுகள் தங்களுக்குள் புதிய எரிசக்தி வர்த்தக கட்டமைப்பை உருவாக்கினால் என்ன நடக்கும்? உதாரணமாக, தற்போது பெரும்பாலான நாடுகள் டாலரை பயன்படுத்தியே சர்வதேச வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றன. அதனால், டாலருக்கு மாற்றாக இந்திய ரூபாய், சீன யுவான் அல்லது ஐக்கிய அரபு அமீரக திர்ஹாம் போன்ற உள்ளூர் நாணயங்களில் எண்ணெய் வர்த்தகம் செய்ய முயற்சி செய்யலாம். மேலும், BRICS நாடுகளுக்குள் நீண்டகால எண்ணெய் விநியோக ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டு, குறைந்த அல்லது நிலையான விலையில் எண்ணெய் கிடைக்கும் சூழல் உருவானால், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு அது சாதகமாக அமையலாம். இதன் மூலம் எரிபொருள் விலை மற்றும் பணவீக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்தவும் முடியும்.
ஆனால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உடனடியாகக் குறைந்துவிடும் என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில், BRICS நாடுகளுக்குள் எண்ணெய் வர்த்தகம் அதிகரித்து, மேற்கத்திய நாடுகளுக்கான விநியோகம் குறைந்தால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எண்ணெய் விலை அதிகரிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. இதில்தான் அமெரிக்காவுக்கான மிகப்பெரிய சவால் தொடங்குகிறது. ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, BRICS நாடுகள் தங்களுக்குள்ளேயே எண்ணெய் வர்த்தகத்தை மேம்படுத்தினால், உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் டாலரின் பயன்பாடு குறையலாம். இதனால் சர்வதேச வர்த்தகத்தில் டாலரின் ஆதிக்கமும் படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளது. மேலும், மேற்கத்திய நாடுகளுக்கான எண்ணெய் விநியோகம் குறைந்து, அங்கு எண்ணெய் விலை உயரத் தொடங்கினால், அது உலகப் பொருளாதாரத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, BRICS நாடுகள் இணைந்து புதிய எரிசக்தி நெட்வொர்க்கை உருவாக்குமா? உலக பொருளாதார சந்தையில் ஏற்பட போகும் மாற்றம் என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
செய்தியாளர் - ராஜ்குமார்.ர