கோடைக்காலம் வந்தாலே அனைவரின் நினைவிலும் முதலில் வருவது ஐஸ்கிரீம்தான். விதவிதமான சுவைகளில் ஐஸ்கிரீம்களை நாம் சாப்பிட்டு இருக்கிறோம். ஆனால், தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீம் என்றால் நம்ப முடிகிறதா? அமெரிக்காவில் இதுதான் இப்போது பேசுபொருள். ஆம், அமெரிக்காவின் பிரபல குழந்தைகள் நலப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஃப்ரிடா என்ற நிறுவனம், தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.. இதைப்பற்றி அறிந்த பலரும், ஐஸ்கிரீமில் உண்மையிலேயே தாய்ப்பால் சேர்த்திருக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பினர்.
ஆனால், உண்மையில் இந்த ஐஸ்கிரீமில் தாய்ப்பால் சேர்க்கப்படவில்லை. வழக்கமான ஐஸ்கிரீம்கள் போலவே பால், க்ரீம், முட்டையின் மஞ்சள் கரு, சர்க்கரை ஆகியவற்றுடன், கூடுதல் சுவைக்காக தேன் மற்றும் பழச்சாறுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் உள்ள பிரத்யேகமான பொருள் ‘லிப்போசோமல் போவின் கொலஸ்ட்ரம்’.. இந்த கொலஸ்ட்ரம் பசுக்களிடமிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. LIMITED EDITION -ஆக தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஐஸ்கிரீம் நியூயார்க்கில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த தாய்ப்பால் சுவை ஐஸ்கிரீம் குறித்து இணையத்தில் எதிராகவும், ஆதரவாகவும் பல விதமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.