பிரேசில் டேவி நுனிஸ் மொரைரா எக்ஸ் தளம்
உலகம்

பிரேசில் | பட்டாம்பூச்சியால் வந்த மரணம்? 14 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!

பல வண்ண நிறங்களில் நம் கண்களுக்கு விருந்து அளிக்கக்கூடியவை, பட்டாம்பூச்சிகள். அப்படிப்பட்ட ஒரு பட்டாம்பூச்சியால் சிறுவர் ஒருவரின் உயிர் பறிபோயிருப்பதாகக் கூறப்படுவதுதான் வியப்பாக இருக்கிறது.

Prakash J

பிரேசிலைச் சேர்ந்தவர் டேவி நுனிஸ் மொரைரா (14). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவருக்கு உடல் முழுதும் அலர்ஜி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவருக்கு மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டபோதும் தொடர்ந்து பயனளிக்கவில்லை. அப்போதுதான் அவர் மருத்துவர்களிடம் உண்மையைத் தெரிவித்துள்ளார். அவர் சொன்ன விஷயம் மருத்துவர்களுக்கே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இறந்த பட்டாம்பூச்சியை எடுத்து தண்ணீரில் போட்டு கலக்கியதாகவும், அந்த தண்ணீரை ஊசியில் எடுத்து அதை தனது காலில் செலுத்தியதாகவும் அதன்பிறகே இத்தகைய பிரச்னைகள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பட்டாம்பூச்சி

எனினும், அவரது உயிரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ஆன்லைன் சேலஞ்ச் காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். தவிர, அவர் பயன்படுத்திய ஊசியையும் பறிமுதல் செய்துள்ளனர். ஆயினும், பிரேதப் பரிசோதனை குறித்தே முழுமையான விசாரணை நடத்த முடியும் எனத் தெரிவித்துள்ளனர். மறுபக்கம், தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் இளைஞர்கள் இறந்த பட்டாம்பூச்சிகளை தங்களுக்குள் ஊசி போட்டுக் கொள்ளும் ஒரு வைரல் சமூக ஊடகத் தளங்களில் பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து சிகிச்சையளித்த மருத்துவர், “எம்போலிசம், தொற்று அல்லது ஒவ்வாமை ஆகியன ஏற்பட்டிருக்கலாம். இந்த கலவையை அவர் எவ்வாறு தயாரித்தார் என்பது தெரியவில்லை. அதில், உள்ளே காற்று இருந்திருக்கலாம். இது எம்போலிசத்திற்கு வழிவகுக்கும். இரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்பு அல்லது எம்போலிசம் திடீர் மரணத்திற்கு வழிவகுக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சாவ் பாலோ பல்கலைக்கழகத்தின் விலங்கியல் அருங்காட்சியக இயக்குநருமான மார்செலோ டுவர்டே, “பட்டாம்பூச்சியின் உடலில் திரவம் இருக்கும். இது அலர்ஜியை ஏற்படுத்தும். இதனால் இந்த சிறுவனுக்கு உடலில் அலர்ஜி அதிகமாக இறந்திருக்கலாம். பட்டாம்பூச்சிக்கு மனிதனின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்குமா என்பது பற்றி விரிவான ஆய்வுகள் இன்னும் செய்யப்படவில்லை'' என்று கூறியுள்ளார்.

பட்டாம்பூச்சி

மேலும் சில நிபுணர்கள், ”பட்டாம்பூச்சிகளில் பல வகைகள் உள்ளன. இதில் பல பட்டாம்பூச்சி இனங்கள் நச்சுத்தன்மை வாய்ந்த பால்வீட் தாவரங்களில் இருக்கும் கம்பளிபூச்சிகளை சாப்பிடுகின்றன. அத்தகைய பட்டாம்பூச்சிகளில் சிறியளவு நச்சுத்தன்மை கொண்ட விஷம் இருக்கலாம். இதன்மூலம் மனிதர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் உயிர் போகும் என்று கூறிவிட முடியாது'' என கூறியுள்ளனர்.