உலகம்

‘பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்தா?’-கெஎஃப்சி, பீட்சா ஹட்டுக்கு எதிராக ட்டுவிட்டர் ட்ரெண்டிங்!

EllusamyKarthik

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவாக சமூக வலைதள பக்கங்களில் கருத்துக்கள் பதிவிட்ட பன்னாட்டு நிறுவனங்களான ஹூண்டாய், பீட்சா ஹட், கியா, KFC மாதிரியான நிறுவனங்களை புறக்கணிப்போம் என சொல்லி ஹாஷ்டேக் முழக்கத்தை முன்னெடுத்துள்ளனர் இந்தியாவை சேர்ந்த நெட்டிசன்கள். 

என்ன நடந்தது?

காஷ்மீர் விவகாரத்தை முன்னெடுக்கும் விதமாக கடந்த 1990 முதல் பாகிஸ்தான் நாட்டில் ஆண்டுதோறும் பிப்ரவரி 5-ஆம் தேதி ‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ என கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த நாளில் பாகிஸ்தான் நாட்டில் தேசிய விடுமுறை எனவும் தெரிகிறது. இந்த நிலையில் ‘ஹூண்டாய் பாகிஸ்தான்’ அது தொடர்பான பதிவு ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் “நமது காஷ்மீரி சகோதரர்களின் தியாகங்களை நினைவு கொள்வோம், அவர்கள் சுதந்திரத்திற்காக தொடர்ந்து போராடி வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக நிற்போம்” என தெரிவித்தது ஹூண்டாய் பாகிஸ்தான். அதற்கு இந்திய நெட்டிசன்கள் முன்னதாக (நேற்று பிப்ரவரி 6, 2022) ஹூண்டாய் நிறுவனத்தை புறக்கணிப்போம் என சமூக வலைதளங்களில் முழக்கமிட்டனர். 

இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டில் இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனங்களான KFC, கியா, பீட்சா ஹட் மாதிரியான நிறுவனங்களும் தங்கள் சமூக வலைதள பக்க ஹேண்டில்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பதிவுகளை போஸ்ட் செய்துள்ளனர். இந்தியாவிலும் இந்நிறுவனங்கள் வர்த்தகம் மேற்கொண்டு வருகின்றன. அதனை கவனித்த இந்திய நெட்டிசன்கள் தற்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.