உலகம்

தனிநாடாக அறிவிக்கப்படவுள்ள போகன் விலி!

webteam

பப்புவா நியூ கினியாவின் ஓர் அங்கமாக இருந்த போகன் விலி தனி நாடாக அறிவிக்கப்படவுள்ளது.

பப்புவா நியூ கினியா பல தீவுகளை கொண்ட தொகுப்பு நாடாகும். இதில் ஒரு அங்கமாக இருந்தது போகன்விலி. 3 லட்சம் மக்கள் தொகையை கொண்ட இந்த நாடு சுமார் 10 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. கடந்த 18 ஆம் நூற்றாண்டில் பிரான்சை சேர்ந்த கடலொடி போகன்விலி என்பவர் இந்த தீவுக்கு முதன்முதலில் வந்ததால் அவருடைய பெயரே இந்த தீவுக்கு சூட்டப்பட்டது.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜெர்மன் காலனி ஆதிக்க நாடாக இருந்த நியூ கினியாவுடன் இணைக்கப்பட்டது. முதலாம் உலகப்போரின்போது இந்த தீவுக்கூட்டத்தை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. 1975 ஆம் ஆண்டுவரை ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த தீவு, இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜப்பான் வசம் சென்றது.

பப்புவா நியூ கினியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே, அதாவது 1975 ஆம் ஆண்டே போகன் விலியை‌ தனிநாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்கு ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினி ஆகிய இரு நாட்டு அரசுகளும் மறுப்பு தெரிவித்தன. இதையடுத்து மலைகள், இயற்கை வளங்கள், தாமிர மற்றும் தங்க சுரங்கங்கள் நிறைந்த போகன்விலியை பல்வேறு நாடுகள் பொருளாதார ரீதியில் சுரண்டுவதாக குற்றஞ்சாட்டி தனிநாடு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதனை வலியுறுத்தி 1988 ஆம் ஆண்டு உள்நாட்டுப்போரும் மூண்டது. பின்னர் 1997 ஆம் ஆண்டு சர்வதேச நாடுகள் தலையீட்டால் போர் முடிவுக்கு வந்தது. எனினும் போர் நடந்த 9 ஆண்டுகளில் சுமார் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து 2005 ஆம் ஆண்டு இந்த தீவுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது.

போகன்விலி நாட்டில் வாழும் பூர்வக்குடி மக்கள் நான்கில் மூன்று பேர் தனிநாடாக அறிவிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த‌ திட்டமிடப்பட்டது. அதன்படி நவம்பர் 23 முதல் டிசம்பர் 7 ஆம் தேதி வரை பல கட்டமாக கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தீவின் மொத்த மக்கள் தொகையில் 1 லட்சத்து 81 ஆயிரம் பேர் பேர் வாக்கெடுப்பில் கலந்துகொண்டு வாக்களித்தனர். அயர்லாந்து முன்னாள் பிரதமர் பெர்டி ஆகர்ன் தலைமையில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில், சுதந்திரம் கோரி 98 சதவீத பேர் வாக்களித்ததால் தனிநாடாக பிரகடனப்படுத்துமாறு முடிவுகள் வெளியானது. தனிநாடாக அறிவிக்கப்பட்டால் உலகிலேயே மிகச்சிறிய நாடு என்ற பெருமையை போகன்விலி பெறும்.