பிரட்டன் நாடாளுமன்றத்தை ஐந்து வாரங்களுக்கு ஒத்திவைக்க பரிந்துரைத்த பிரதமர் போரிஸ் ஜான்சனின் முடிவு சட்டவிரோதமானது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 5 வாரங்களுக்கு நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க ராணிக்கு பரிந்துரை செய்தார். பிரட்டன் வரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறவுள்ளது. இந்தச் சூழலில் பிரட்டன் நாடாளுமன்றம் முடக்கப்பட்டதற்கு எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அந்நாட்டு உச்சநீதிமன்றம் விசாரித்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தின் தலைவர் பிரேண்டா ஹாலே, “பிரதமரின் இந்த முடிவு சட்டவிரோதமானது. ஏனென்றால் இந்த முடிவு நாடாளுமன்றத்தின் செயல்பாட்டை முடக்கவதோடு அதன் அரசியல் சாசன கடமையையும் முடக்குகிறது. இந்தத் தீர்ப்பின் மூலம் பிரிட்டன் நாடாளுமன்றத்தின் ஒத்திவைப்பு உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.