உலகம்

கிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடிப்பு: 8 பேர் உடல் சிதறி பலி!

கிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடிப்பு: 8 பேர் உடல் சிதறி பலி!

webteam

ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உடல் சிதறி பலியானார்கள். 45 பேர் படுகாயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாபாத் நகரில் ரமலான் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நேற்று முன் தினம் இரவு நடைபெற்றது. இதை ஏராளமான ரசிகர்கள் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்பில், 8 பேர் உடல் சிதறி பலியாயினர். 45 பேர் படுகாயம் அடைந்தனர்.இதைத் தொடர்ந்து விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்களில் இந்த கிரிக்கெட் போட்டியின் அமைப்பாளர் இதயத்துல்லா ஜாகீர், ஜலாலாபாத் துணை மேயர் டாக்டர் நெக்மல் உள்ளிட்டவர்களும் அடங்குவார்கள். 

மொத்தம் நான்கு குண்டுகள் வெடித்ததாகவும் இரண்டு குண்டுகள் மைதானத்துக்குள்ளும் இரண்டு குண்டுகளும் வெளியிலும் வெடித்ததாகக் கூறப்படுகிறது. குண்டுவெடிப்பு நடந்த போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் கரீம் சாதிக் மைதானத்தில் இருந்துள்ளார். ஆனால் அவர் காயமின்றி தப்பினார். 

இந்த குண்டுவெடிப்புக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று தலீபான் தீவிரவாத அமைப்புத் தெரிவித்துள்ளது.