பலூச் விடுதலை ராணுவம்  Pt web
உலகம்

பாகிஸ்தான் | பலுச் விடுதலை ராணுவம் தற்கொ*ப்படை தாக்குதல்.. 30 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் குவாதர் மாவட்டத்தில் உள்ள கடலோரக் காவல்படை முகாம் மீது பலுச் விடுதலை ராணுவம் நடத்தியுள்ள தற்கொலைப் படைத் தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Premkumar S

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம், குவாதர் மாவட்டத்தின் ஜிவானி பகுதியில் உள்ள பாகிஸ்தான் கடலோரக் காவல்படை முகாம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில், 30 துணை ராணுவப்படையினர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் கடுமையாக காயமடைந்திருக்கும் நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பலூச் விடுதலை ராணுவம்

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் பலுச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றிருக்கிறது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று மாலை 6.32 மணிக்கு, பலூச் விடுதலை ராணுவத்தின், மஜீத் பிரிகேட் என்ற உயரடுக்கு பிரிவைச் சேர்ந்த தற்கொலைப் படை வீரர் அத்தாவுல்லா பலூச்
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை கடலோரக் காவல்படை முகாமுக்குள் செலுத்தி வெடிக்கச் செய்ததாக தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து 43 விநாடிகள் கொண்ட காணொளி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. அதில், வெடிபொருள் நிரப்பட்ட வாகனம் கடலோரப்படை முகாமிற்குள் நுழைவதைக் காட்டுகிறது.

இந்த வெடிப்பில் முகாம் கடுமையாக சேதமடைந்ததுடன், அதனைத் தொடர்ந்து தங்கள் அமைப்பின் ஆயுதப் பிரிவைச் சேர்ந்த போராளிகள் முகாமுக்குள் நுழைந்து பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 30-க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் பலுச் ராணுவப்படை தெரிவித்துள்ளது.

தற்கொலைப்படைத் தாக்குதல்

காயமடைந்தவர்களின் கவலைக்கிடமான நிலை மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ள வீரர்களைக் கருத்தில் கொண்டு, எதிரித் தரப்பில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது," என்று பலூச் விடுதலை ராணுவம் செய்தித் தொடர்பாளர் ஜீயந்த் பலோச் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, இந்த தாக்குதல் குறித்தான விரிவான அறிக்கையை விரைவில் வெளியிடப்போவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளதுடன், 'பலூசிஸ்தானின் முழுமையான சுதந்திரம்' என்று தாங்கள் அழைப்பதை அடையும் வரை, பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான தங்களின் ஆயுதப் போராட்டம் 'அதே தீவிரத்துடன்' தொடரும் என்றும் பலூச் விடுதலை ராணுவம் எனும் தடைசெய்யப்பட்ட அமைப்பு கூறியுள்ளது.