ஒவ்வொரு நாட்டு ரூபாய் மதிப்பும் ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கும். ஆனால் கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு மட்டும் பெரும் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக கடந்த ஒருமாத காலத்தில்.. எதனால் இந்த ஏற்றம்? உலக பொருளாதாரத்தில் இது ஆரோக்கியமான போக்கா? பிட்காயின் முதலீடு பாதுகாப்பானதா? விரிவாக பேசலாம் இந்தத் தொகுப்பில்...
அமெரிக்க அதிபர் தேர்தல் பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ட்ரம்புக்கு சாதகமான அலை உருவாகிக்கொண்டிருந்த சமயத்தில் இருந்தே பிட் காயின் எனப்படும் மெய்நிகர் நாணயங்களின் மதிப்பு ஏறத் தொடங்கியது. ட்ரம்ப் வெற்றி பெற்ற பிறகு அவர்தான் அமெரிக்காவின் புதிய அதிபர் என்பது உறுதியான பிறகு பிட்காயின் எனப்படும் கிரிப்டோகரன்சியின் மதிப்பு அசாத்திய உச்சங்களை தொட்டுக்கொண்டிருக்கிறது. அதிலும் வரலாறு காணாத வகையில் பிட்காயின் விலை ஒரு லட்சம் டாலர்களை கடந்து விட்டது.
பிட்காயினுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் ட்ரம்ப், அமெரிக்காவின் பங்கு- பரிவர்த்தனை ஆணையத்தின் தலைவராக Paul Atkins என்பவரை நியமித்துள்ளார்.
டிஜிட்டல் சொத்துகள் மற்றும் பிற புதுமையான டிஜிட்டல் பரிவர்த்தனைகள், முதலீட்டு சந்தை உத்திகளில் நம்பிக்கை கொண்டவரான Paul Atkins நியமனம், அமெரிக்காவில் பிட்காயின் வளர்ச்சிக்கு இன்னும் துண்டுகோலாக அமையும் என்று கருதப்படுகிறது.
ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்துவமான ரூபாய் மதிப்பு இருக்கிறது. இந்தியாவுக்கு ரூபாய் எனில் அமெரிக்காவுக்கு டாலர், இதேபோல ஒவ்வொரு நாட்டுக்கும் ரூபாய் இருக்கும்போது மெய்நிகர் நாணயங்கள் என்பவை என்ன? குறிப்பாக பிட்காயின் என்பது என்ன? அதன் மதிப்பு குறித்த கேள்விகள் எழலாம். இதில் முதலீடு செய்வது பற்றி தெளிவான விளக்கத்தை அளிக்கிறார் பொருளாதார வல்லுநர் ராஜேஷ்.
அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் அமையும் புதிய அரசு, இப்போதே வர்த்தக ரீதியில் பல நடவடிக்கைகளை அறிவித்துவருகிறது. பிட்காயினுக்கு ட்ரம்ப் அளிக்கும் ஆதரவு அதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது.
அமெரிக்காவில் தேர்தல் நடைபெற்ற நவம்பர் 5ஆம் தேதி பிட்காயின் மதிப்பு இந்திய ரூபாயில் 57 லட்சமாக இருந்தது. சுமார் ஒருமாத காலத்தில் இந்த மதிப்பு 84 லட்சம் ரூபாயாக அதிகரித்துவிட்டது. ஆனால் இந்தியாவில் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளுக்கு அங்கீகாரம் இல்லை. இருந்தபோதும், கிரிப்டோகரன்சிகளில் பரிவர்த்தனை செய்வது நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
2008 ஆம் ஆண்டு Satoshi Nakamoto என்பவரால் உருவாக்கப்பட்ட முதல் கிரிப்டோகரன்சியான பிட்காயின், 2009 முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இதுபோன்ற கிரிப்டோ கரன்சிகளில் பரிவர்த்தனை செய்வதும், சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதும் நடப்பதால் பல நாடுகள் இன்னும் கிரிப்டோகரன்சியை மதிப்புமிகு நாணயமாக அங்கீகரிக்கவில்லை. ஆனால், அமெரிக்காவின் புதிய அதிபராகப்போகும் டொனால்ட் ட்ரம்ப் இதனை ஆதரிப்பதால் சர்வதேச அளவிலேயே இதன் தாக்கம் எதிரொலிக்கும் என்று கருதப்படுகிறது.