பில்லினியர்ஸ் எக்ஸ் தளம்
உலகம்

ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்பு | 500 பில்லினியர்களின் சொத்து மதிப்பு சரிவு!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பரஸ்பர வரிகளை அறிவித்த பிறகு, உலகின் 500 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு 208 பில்லியன் டாலர் அளவுக்கு சரிந்துள்ளது.

Prakash J

அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்ப், சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் முடிவை அமல்படுத்தினார். இதன்படி இந்தியப் பொருள்களுக்கும் 26% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் 10% வரி ஏப்ரல் 5 முதல் நடைமுறைக்கு வரும், மீதமுள்ள 16% ஏப்ரல் 10 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா தவிர சீனா, கம்போடியா, வியட்நாம், மியான்மர், இலங்கை, வங்கதேசம், செர்பியா, தாய்லாந்து, சீனா, தைவான், பாகிஸ்தான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு 10% வரி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.

பில்லினியர்ஸ்

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் பரஸ்பர வரிகளை அறிவித்த பிறகு, உலகின் 500 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு 208 பில்லியன் டாலர் அளவுக்கு சரிந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சரிவு, ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் 13 ஆண்டு வரலாற்றில் நான்காவது பெரிய சரிவாகும்.

மேலும் கோவிட்-19 தொற்றுநோயின் ஊரடங்கிற்குப் பிறகு இதுவே மிகப்பெரிய சரிவாகும். மேலும், கட்டணங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, பில்லியனர்கள் பட்டியலில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். அந்த வகையில், மிகவும் பாதிக்கப்பட்டவர்களில் ஃபேஸ்புக் மற்றும் மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 17.9 பில்லியன் டாலர்கள் குறைந்து, ஒன்பது சதவீத சொத்து சரிவை சந்தித்துள்ளது.

அடுத்ததாக, டெஸ்லா பங்குகளும் 5.5 சதவீதம் சரிந்துள்ளதால், ட்ரம்பின் நெருங்கிய நண்பரும் அரசாங்க ஆலோசகருமான எலான் மஸ்கும் 11 பில்லியன் டாலரை இழந்துள்ளார். இவர்களைத் தவிர மைக்கேல் டெல் (9.53 பில்லியன் டாலர்), லாரி எலிசன் (8.1 பில்லியன் டாலர்), ஜென்சன் ஹுவாங் (7.36 பில்லியன் டாலர்), லாரி பேஜ் (4.79 பில்லியன் டாலர்), செர்ஜி பிரின் (4.46 பில்லியன் டாலர்) மற்றும் தாமஸ் பீட்டர்ஃபி (4.06 பில்லியன் டாலர்) ஆகியோரின் சொத்துகளும் சரிந்துள்ளன. அமெரிக்காவிற்கு வெளியே பிரான்சின் பெர்னார்ட் அர்னால்டும் சொத்துகளில் சரிவைச் சந்தித்துள்ளார். அர்னால்ட்டின் LVMH பங்குகள் பாரிஸில் சரிவைச் சந்திததன, இதனால் ஐரோப்பாவின் மிகப் பெரிய பணக்காரரின் நிகர மதிப்பில் 6 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.