Bill Gates warning  Reuters
உலகம்

100 கோடி மக்களின் உயிருக்கு ஆபத்து.. பில் கேட்ஸ் விடுத்த எச்சரிக்கை.. நடக்கப்போவது என்ன?

100 கோடி மக்களின் உயிருக்கு ஆபத்து என உலகின் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் விடுத்துள்ள எச்சரிக்கை உலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Praveen Joshva L

கடந்த சில ஆண்டுகளாக AI என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ச்சியடைந்து உள்ளது. இந்த AI மென்பொருள்கள் மனிதர்களின் வேலைகளை பறித்துக்கொள்வதாக தொடர்ந்து விமர்சனங்கள் வரும் நிலையில், எதிர்காலத்தில் இந்தச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித குலத்துக்கே மாபெரும் அச்சுறுத்தலாக வரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

’செயற்கை நுண்ணறிவின் தந்தை’ என்று அழைக்கபடும் ஜெஃப்ரி ஹின்டன் Geoffrey Hinton) கூட செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும், ஏலியன்களின் வருகையும் ஒன்றுதான் என்றும், எதிர்காலத்தில் தன்னைக் காத்துக்கொள்ள AI மனிதர்களையே கொலை செய்யவும் வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மேலும் சமீபத்தில் இந்தச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் மனித கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்ட செய்திகளும் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்த நிலையில், இந்த தொழில்நுட்பம் மனிதர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபரிமிதமானதாக இருக்கிறது என்றும், தவறானவர்கள் கையில் ஏஐ தொழில்நுட்பம் சிக்கினால், அது 100 கோடி மக்களை கொல்லும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக மாறும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தற்போதைய காலகட்டத்தில் மிகவும் சக்தி வாய்ந்த, ஆபத்தான ஆயுதமாக ஏஐ மாறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், இதனால் வரும் ஆபத்துகளைத் தடுக்க ஒவ்வொரு நாட்டு அரசும் இதில் தலையிட்டு கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் இல்லையேல் நிலைமை கைமீறி போய் விடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கெனவே உலகின் மிகப்பெரிய AI தொழில்நுட்ப நிறுவனங்களான OpenAI நிறுவனர் சாம் ஆல்ட்மேன் (Sam Altman), Google DeepMind நிறுவன தலைவர் டெமிஸ் ஹசாபிஸ் (Demis Hassabis) மற்றும் Anthropic நிறுவன தலைவர் டாரியோ அமோடெய் (Dario Amodei) ஆகியோர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித குலத்துக்கே மாபெரும் அச்சுறுத்தலாக வரும் என ஒரு கூட்டு எச்சரிக்கையை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் எதிர்காலத்தில் இந்தச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித குலத்துக்கே மாபெரும் அச்சுறுத்தலாக வரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.