பில் கேட்ஸ் எக்ஸ் தளம்
உலகம்

”இந்தியா ஓர் ஆய்வகம்.. இங்கே நிறைய முயற்சித்து பார்க்கலாம்” - சர்ச்சையில் பில் கேட்ஸ் பேச்சு..!

உலக பணக்காரரான பில் கேட்ஸ், இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய முறையில் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Prakash J

உலகில் மிகப்பெரிய பணக்காரர்களில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில் கேட்ஸும் உள்ளார். இவர் சமீபத்தில் இந்தியா குறித்து பதில் அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் அளித்த பேட்டியொன்றில், இந்தியா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ”இந்தியா கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து உள்ளிட்டவற்றில் மேம்பட்டு வருகிறது. இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியாவில் உயர்தகு முன்னேற்றங்கள் இருக்கும். புதியனவற்றை செய்யக்கூடிய, பரிசோதித்து பார்க்கக்கூடிய ஆய்வகமாக இந்தியா உள்ளது.

இந்தியாவில் நீங்கள் ஒரு விஷயத்தைச் சோதித்து வெற்றி பெற்றுவிட்டால், அந்த விஷயத்தை மற்ற இடங்களுக்குக் கொண்டு செல்லலாம். அமெரிக்காவைத் தவிர்த்து, இந்தியாவில்தான் எங்களுடைய மிகப்பெரிய அறக்கட்டளை அலுவலகம் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

அவருடைய இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு எதிராகப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்தியா குறித்து ஒரு மோசமான பார்வையை பில்கேட்ஸ் கொண்டிருக்கிறார் என பயனர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் இந்தியா குறித்து, அவர் தெரிவித்த கருத்துக்கு பில்கேட்ஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.