Bilawal Bhutto Zardari
Bilawal Bhutto Zardari  File Image
உலகம்

'நானே டேங்கரில் தண்ணீர் வாங்கித்தான் சமாளிக்கிறேன்' - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் புலம்பல்

Justindurai S

பாகிஸ்தான் நாட்டில் கடுமையான நிதி நெருக்கடி நிலவி வருகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததாலும், கடுமையான விலை உயர்வாலும் பாகிஸ்தான் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அதனால், அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு, மின்வெட்டு, உணவு பஞ்சம், வேலைவாய்ப்பின்மை அதிகரித்து பாகிஸ்தான் மக்கள் பரிதவித்து வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடி காரணமாகவே பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து, புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் பதவியேற்றார். ஆனாலும் பொருளாதார நெருக்கடி பெரும் சிக்கலாகவே இருந்து வருகிறது.

Bilawal Bhutto Zardari

இவை ஒருபுறமிருக்க, சமீப நாட்களாக பாகிஸ்தானில் தண்ணீர் தட்டுப்பாடும் அதிகரித்திருக்கிறது. பல இடங்களில் தண்ணீர் பிடிக்க மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்படுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரான பிலாவல் பூட்டோ சர்தாரி, அந்நாட்டு பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பிடம் கராச்சியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து பகிரங்கமாக பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. கராச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பூட்டோ, "நான் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர், ஆனால் நானே டேங்கரில் தண்ணீர் வாங்கித்தான் சமாளிக்க வேண்டியிருக்கிறது. கராச்சியில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க பிரதமர் வேகம் காட்ட வேண்டும்''என்று பூட்டோ கூறினார்.

பாகிஸ்தானில் நிலவிவரும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து ஒரு மத்திய அமைச்சரே பகிரங்கமாக பேசியிருப்பது மூலம் அந்நாட்டின் நிலை வெட்டவெளிச்சமாக தெரிய வந்துள்ளது.