‘தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ திரைப்படம் தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் மீது வழக்குப் பதிவு செய்ய பீகார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்மோகன் சிங் பிரதமரான சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’. இந்தப் படத்தை விஜய் ரத்னகார் இயக்கியுள்ளார். காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றும், அக்கட்சியின் அப்போதைய தலைவர் சோனியா காந்தி பிரதமராக முடியவில்லை. அவருக்கு பதிலாக பொருளாதார வல்லுனரான மன்மோகன் சிங் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து, மன்மோகன் சிங்கிடம் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு என்பவர் எழுதிய புத்தகம் ‘தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’. இந்தப் புத்தகத்தைத் தழுவி, அதே பெயரில் தற்போது திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் உட்கட்சி அரசியலுக்கு மன்மோகன்சிங் பலிகடா ஆக்கப்பட்டதாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி இந்தப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து ட்ரெய்லரை தடை செய்ய வேண்டும், படத்தை தடை செய்ய வேண்டும் என இந்தியாவின் பல இடங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் படத்தில் பல சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறி சுதிர் ஓஜே என்ற வழக்கறிஞர் பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த நீதிபதிகள், அனுபம் கெர் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டனர்.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ‘தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ திரைப்படம் வரும் 11ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.