உலகம்

சிரியாவில் பதற்றம்: அமெரிக்கா வான்வழி தாக்குதல்- ஈரான் ஆதரவுப் படையினா் 17 பேர் உயிரிழப்பு

JustinDurai

சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 17 ஈரான் ஆதரவுப் படையினா் கொல்லப்பட்டனர். 

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக, ஈராக் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களுக்கு அமெரிக்க படையினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில், கடந்த 15ம் தேதி ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், அமெரிக்க ராணுவ வீரர்கள் பலர் காயமடைந்தனர். அதிகம் அறியப்படாத ஷியா பிரிவு பயங்கரவாத அமைப்பான சரயா அவ்லியா அல்-டாம் என்ற அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இந்த அமைப்பு ஈரான் ஆதரவுடன் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈராக்கின் எல்லையில் அமைந்துள்ள சிரியா நாட்டின் புகமல் நகரில் அமெரிக்க படையினர் அதிரடியாக வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 17 ஈரான் ஆதரவுப் படையினா் பலியானதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. பலியானவர்கள் அனைவரும் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு ஜோ பைடன் ஒப்புதல் தெரிவித்த முதலாவது ராணுவ நடவடிக்கை என்பதால், இந்த வான்வழித் தாக்குதல் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக, பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், ''அமெரிக்க ராணுவ நிலை மீதான தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் உரிய ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன், சிரியா மற்றும் ஈராக்கில் பதற்றம் அதிகரிக்காமல் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் தூதரக ரீதியிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன'' என்றார். இச்சூழலில் சிரியாவின் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.