உலகம்

ராணுவ வீரர்களுக்கு நேர்ந்த சங்கடம் - பதவியேற்ற 3ம் நாளிலேயே மன்னிப்பு கேட்ட பைடன்

ராணுவ வீரர்களுக்கு நேர்ந்த சங்கடம் - பதவியேற்ற 3ம் நாளிலேயே மன்னிப்பு கேட்ட பைடன்

webteam

அமெரிக்காவின் 46-வது அதிபராக கடந்த 20ஆம் தேதி பதவியேற்றார், ஜோ பைடன். முன்னதாக பதவியேற்புக்கு முன் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. அப்போது நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து நாடாளுமன்ற கட்டடத்தை சுற்றிலும் தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.

பதவியேற்பு விழாவில் எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்று வாஷிங்டன் நகரம் முழுவதும் பாதுகாப்பு படையினரின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. கடந்த சில வாரங்களாக பாதுகாப்பு ஏஜென்சிகள் பெற்றுக்கொண்ட அச்சுறுத்தல்கள் மற்றும் ஆயுத வன்முறைகள் பற்றிய பல அறிக்கைகள் காரணமாக வார இறுதியில் வாஷிங்டன் டி.சி உண்மையில் ஒரு காரிஸன் நகரமாக மாற்றப்பட்டது. பைடன் பதவியேற்பு நிகழ்ச்சியின்போது மட்டும் வாஷிங்டன் டி.சி.யில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, பதவியேற்பு முடிந்த நிலையில் வியாழக்கிழமை கேப்பிட்டல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்ற பிறகு, கேப்பிட்டல் கட்டடத்துக்கு அருகில் உள்ள அன்டர் கிரவுண்ட் கார் பார்க்கிங்கில் படுத்து தூங்குவது போல் சில புகைப்படங்கள் வெளியானது. பார்க்கிங் பகுதியில் கார் புகைக்கு மத்தியிலும், கழிப்பறை வசதி இல்லாத நிலையிலும் அவர்கள் தங்கியிருந்த தகவல் விமர்சனத்தை ஏற்படுத்தியது. பலர் இவர்களின் புகைப்படங்களை பகிர்ந்து நிலையை கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார் அதிபர் பைடன். நேஷனல் கார்டு பீரோ தலைவரை நேரில் அழைத்து அவரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய அறிவுரை கூறி உத்தரவிட்டுள்ளார். இதேபோல் பைடனின் மனைவி ஜில் பைடன் பார்க்கிங் பகுதியில் இருந்த பாதுகாப்பு படையினரை நேரில் சந்தித்து அவர்களிடம், நன்றி தெரிவித்துக்கொண்டார். இதன்பின் இந்த சம்பவத்தின் சர்ச்சை ஓரளவு ஓய்ந்துள்ளது.