பிடிபட்ட தங்கம் மற்றும் ரூபாய் கூகுள்
உலகம்

போபால் | அடேங்கப்பா... சொகுசு காரில் இருந்த கட்டுக்கட்டான பணம், தங்கம் - யாரும் உரிமை கோரவில்லை!

காரின் பதிவு எண்ணைக்கொண்டு விசாரணை நடத்தியதில், சௌரப் சர்மாவின் நெருங்கிய கூட்டாளியான சேதன்சிங் கவுர் என்பவருக்கு அந்த கார் சொந்தமானது என்று தெரியவந்தது.

Jayashree A

போபலில் சொகுசு கார் ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட கிலோ கணக்கான தங்கம் மற்றும் கோடிக்கணக்கான பணத்தை யாரும் உரிமை கோரவில்லை...

கடந்த வருடம் டிசம்பர் மாதம் போபால் அருகே உள்ள வனப்பகுதியில் சொகுசு கார் ஒன்று வெகு நேரமாக சந்தேகத்துக்கு இடமான வகையில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால், சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்தத் தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்த வருமானவரித்துறையினர், அந்த சொகுசு காரை ஆராய்ந்துள்ளனர்.

அந்த சொகுசு காரில் நிறைய பைகள் இருந்துள்ளன. மேலும் அந்த காரானது திறக்க முடியாமல் பூட்டப்பட்டிருந்ததால், வருமான வரித்துறையினர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரின் உதவியுடன் சொகுசு காரை திறந்த வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கிருந்த பைகளை சோதனை செய்தனர்.

அவர்களின் சோதனையில் 52 கிலோ தங்ககட்டிகள் மேலும் சில பைகளில் சுமார் 9.8 கோடி ரூபாய் ரொக்க பணமும் இருந்தது தெரியவந்தது.

இத்தனை அடுத்து, தங்கம் மற்றும் பணத்தை சொகுசு காரில் விட்டு சென்றது யார் என்று காவல்துறையினரும், வருமானவரித்துறையினர் மற்றும் அமலாக்கதுறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், அமலாக்கதுறை மற்றும் வருமானவரித்துறையின் பார்வை மத்தியப் பிரதேச போக்குவரத்துத் துறையில் முன்னாள் கான்ஸ்டபிளான சவுரப் சர்மா மீது விழுந்துள்ளது. இதற்கு முன்னதாக 2024ல் சௌரப் சர்மா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பணம் நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் உட்பட கிட்டத்தட்ட ரூ. 8 கோடி மதிப்புள்ள சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டது .

மேலும் காரின் பதிவு எண்ணைக்கொண்டு விசாரணை நடத்தியதில், சௌரப் சர்மாவின் நெருங்கிய கூட்டாளியான சேதன்சிங் கவுர் என்பவருக்கு அந்த கார் சொந்தமானது என்று தெரியவந்தது. சேதன்சிங்கை அமலாக்கதுறையினர் விசாரணை செய்த பொழுது, தனக்கும், இதற்கும் எந்தவித சம்பந்தம் இல்லை என்றும், தனது காரை ஓட்டுநருக்கு கடன் கொடுத்ததாக கூறியுள்ளார்.

கைது

தற்பொழுது இந்த விசாரணையானது நாடு கடந்து விரிவடைந்துள்ளது. மேலும் சௌரப் சர்மா மற்றும் சேதன் சிங் இருவரும் சட்டவிரோத தங்கக் கடத்தலுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்றும் கூறப்படும் நிலையில், சர்மாவின் நிதி பரிவர்த்தனை துபாய் சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியவுடன் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இப்போதைக்கு, சவுரப் சர்மாவும் அவரது கூட்டாளிகளான சேதன் கவுர் மற்றும் ஷரத் ஜெய்ஸ்வால் ஆகியோர் நீதிமன்றக் காவலில் உள்ளனர். ஆனால் இவர்கள் முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.