பெட்டர் ஹோம் & ஃபைனான்ஸ் நிறுவனம் (Better Home & Finance Holding Company) (Better.com) என்பது அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு முன்னணி நிதித் தொழில்நுட்பக் (FinTech) நிறுவனமாகும். இந்த நிறுவனம் டிஜிட்டல் முறையில் அடமானக் கடன், வீட்டுக் கடன் மற்றும் காப்பீட்டுச் சேவைகளை வழங்குகிறது.
சாஃப்ட்பேங்க் (SoftBank) போன்ற சர்வதேச நிறுவனங்களின் முதலீடுகளுடன், சுமார் 110 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான கடன்களை வழங்கிப் பிரபலம் அடைந்த இந்த நிறுவனம், 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஒரு ஜூம் அழைப்பின் மூலம் 900 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த சம்பவத்திற்குப் பிறகு, நற்பெயரையும் நிதிநெருக்கடியையும் சந்திக்க ஆரம்பித்தது. அந்த ஆண்டு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) விஷால் கார்க் (Vishal Garg),ஒரே ஜூம் (Zoom) வீடியோ அழைப்பில் 900-க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட 3 நிமிட ஜூம் வீடியோ அழைப்பில், இந்த அதிரடி பணிநீக்கத்தை அறிவித்தார். இதனால், நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் சுமார் 9% முதல் 15% வரையிலான ஊழியர்கள் (சுமார் 900 பேர்) வேலையை இழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு முன்பே, ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் அவர்களை ’மந்தமான டால்ஃபின்கள்’ (Dumb Dolphins) எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இது, மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து, தாம் நடந்துகொண்ட விதத்திற்காக மன்னிப்பு கோரிவிட்டு தற்காலிகமாக விடுப்பில் சென்றார். தவிர, அதே ஆண்டில் அந்த நிறுவனத்தின் விற்பனை, 2021-இல் சுமார் 1.5 பில்லியன் டாலரிலிருந்து 2023-இல் வெறும் 70 மில்லியன் டாலராக வீழ்ச்சியடைந்தது. அதன் பிறகு நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 300 மில்லியன் டாலராகக் குறைந்தது. இந்த சம்பவத்தால் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நற்பெயர் இழப்பு மற்றும் பெரும் நிதிச் சரிவு காரணமாக, அந்த நிறுவனம் தற்போது விஷால் கார்க்கை CEO பதவியில் இருந்து முழுமையாக நீக்கியுள்ளது.