Jeffrey Archer reuters
உலகம்

30 கோடிப் புத்தகங்கள்.. விற்பனையில் சாதித்த ’கதை சொல்லும் மேதை’.. காலமானார் ஜெஃப்ரி ஆர்ச்சர்!

ஆர்ச்சரும் அவரது மனைவி மேரியும் இந்த ஆண்டு தங்களது 60ஆவது திருமண ஆண்டுவிழாவைக் கொண்டாடினர் என ஹார்பர்காலின்ஸ் தெரிவித்தது.

Prakash J

புகழ்பெற்ற பிரிட்டிஷ் நாவலாசிரியரும், கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் அரசியல்வாதியுமான ஜெஃப்ரி ஆர்ச்சர் (Jeffrey Archer)தனது 86-ஆவது வயதில் காலமானார். அவரது இறப்பைப் பிரபல புத்தக வெளியீட்டாளரான ஹார்ப்பர்காலின்ஸ் (HarperCollins) உறுதிப்படுத்தியுள்ளது.

புகழ்பெற்ற பிரிட்டிஷ் நாவலாசிரியரான ஜெஃப்ரி ஆர்ச்சர், 1940ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி வடக்கு லண்டனில் பிறந்தார். 1979-இல் அவர் எழுதி வெளியான 'கேனும் ஏபெலும்' (Kane and Abel) நாவல் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நாவல், உலகளவில் அதிகம் விற்பனையான நாவல்களில் ஒன்றாக உள்ளது. அதேபோல், அவருடைய ’கிளிஃப்டன் க்ரானிக்கிள்ஸ்’நாவலும் அதிகளவில் விற்பனையானது. கிட்டத்தட்ட அவருடைய ஐம்பது ஆண்டுகால எழுத்துப் பணியில் 30 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன. அவருடைய இறுதி நாவலான ஆடம் அண்ட் ஈவ், இன்று (அக்.6) வெளியாக உள்ளது. மேலும், அந்தப் புத்தகம் குறித்து விவாதிப்பதற்காக, சனிக்கிழமையன்று செல்டென்ஹாம் விழாவில் அவர் கலந்துகொள்ளவும் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்குள் அவர் காலமான சம்பவம் அவரது வாசகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவு குறித்து ஹார்பர்காலின்ஸின் இங்கிலாந்து தலைமை நிர்வாக அதிகாரியும், ஆர்ச்சரின் பதிப்பாசிரியருமான கேட் எல்டன் ஒரு அறிக்கையில், "பல தலைமுறை வாசகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்த ஓர் எழுத்தாளரையும், ஓர் உண்மையான நண்பரையும் இழந்ததில் நாங்கள் அனைவரும் பேரதிர்ச்சி அடைகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஆர்ச்சரை ஒரு ’கதைசொல்லும் மேதை’ எனக் குறிப்பிட்டதுடன், ’அவரது வாசகர்கள்தான் அவருக்கு எல்லாமே’ எனத் தெரிவித்திருந்தது. ஆர்ச்சரும் அவரது மனைவி மேரியும் இந்த ஆண்டு தங்களது 60ஆவது திருமண ஆண்டுவிழாவைக் கொண்டாடினர் என ஹார்பர்காலின்ஸ் தெரிவித்தது.

Jeffrey Archer

எழுத்துப் பணியைத் தாண்டி, 1969-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினராகத் (MP) தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 2001-ஆம் ஆண்டு அவதூறு வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் பொய் சாட்சியம் அளித்ததற்காக குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்றார். சிறை அனுபவங்களை மையமாக வைத்து 'ஏ பிரிசன் டைரி' (A Prison Diary) என்ற நூலையும் எழுதியுள்ளார்.