உலகம்

ட்ரம்ப்- கிம் பாதுகாப்பு பணியில் 1800 நேபாள கூர்க்காக்கள்

ட்ரம்ப்- கிம் பாதுகாப்பு பணியில் 1800 நேபாள கூர்க்காக்கள்

webteam

சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் உடனான சந்திப்பின் பாதுகாப்புக்கு நேபாளத்தைச் சேர்ந்த கூர்க்காக்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 

சிங்கப்பூர் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்தார். அதன் பிறகு ஏற்பாடு செய்யப்பட்ட மதிய விருந்தில், பிரதமர் லீயுடன், சிங்கப்பூரின் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், சட்ட உள்துறை அமைச்சர் சண்முகம், தகவல் தொடர்பு அமைச்சர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அமெரிக்க அதிபரோடு, வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் சந்திப்புக்கு சிங்கப்பூர் முழுவதும் உச்சக்கட்டப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தப் பணியில் அச்சத்தை துச்சமாக மதிக்கும் நேபாள கூர்காக்கள் சுமார் ஆயிரத்து 800 பேர் ஈடுபட்டுள்ளனர். பிரவுன் நிற பாரம்பரிய தொப்பி அணிந்துள்ள கூர்க்காக்கள் ட்ரம்ப்-கிம் சந்திப்பு நடைபெறும் சென்டோசா தீவு முழுவதும் பாதுகாப்பு பணியை ஏற்றுள்ளனர். ரைபிள் துப்பாக்கியுடன் கூர்மையான கத்தியும் அவர்கள் ஏந்தியுள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வின் பாதுகாப்பு பணியில் தாங்கள் ஈடுபட்டுள்ளது பெருமையளிப்பதாக‌ கூர்க்காக்கள் மக‌ழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.