ட்ரம்ப், நெதன்யாகு ராய்ட்டர்ஸ்
உலகம்

துருக்கிக்கு போர் விமானம் விற்பனை | அமெரிக்காவை எதிர்க்கும் இஸ்ரேல்!

இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் முடிவோடு மாறுபட்டாலும், அதிபர் ட்ரம்புக்கும் தமக்கும் இடையே எந்தவொரு பெரிய பிளவோ அல்லது மோதலோ இல்லை என்று நெதன்யாகு தெளிவுபடுத்தியுள்ளார்.

Prakash J

துருக்கிக்கு எஃப்-35 (F-35) ஸ்டெல்த் போர் விமானங்கள் மற்றும் அதிநவீன ஜெட் இன்ஜின்களை அமெரிக்கா விற்பனை செய்ய திட்டமிட்டு வருவதற்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - ஈரான் போர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அதற்கு இஸ்ரேல் அதிருப்தி தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, அமெரிக்கா - இஸ்ரேல் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில், துருக்கிக்கு எஃப்-35 (F-35) ஸ்டெல்த் போர் விமானங்கள் மற்றும் அதிநவீன ஜெட் இன்ஜின்களை அமெரிக்கா விற்பனை செய்வதற்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேட்டோ மாநாட்டில் பங்கேற்பதற்காக துருக்கி சென்றுள்ள நிலையில், இதை உறுதிப்படுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “துருக்கிக்கு எஃப்-35 விமானங்கள் அல்லது போர் விமான என்ஜின்களை வழங்குவது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அதிகார சமநிலையைக் குலைக்கும்” என எச்சரித்துள்ளார்.

பெஞ்சமின் நெதன்யாகு

தற்போதைய அதிகார சமநிலையானது இஸ்ரேலின் வான்வழி மேலாதிக்கத்தாலும், அமெரிக்காவின் பலத்தாலுமே பாதுகாக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் துருக்கி அதிபர் ரசிப் தயிப் எர்டோகனையும் நெதன்யாகு விமர்சித்துள்ளார். துருக்கியின் தற்போதைய ஆட்சி 'முஸ்லிம் பிரதர்ஹுட்' கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுள்ளது என்றும், அமெரிக்காவிற்கு அது ஒரு சிறந்த நட்பு நாடாக இருக்க முடியாது என்றும் விமர்சித்துள்ள அவர், ஒட்டோமான் பேரரசை மீண்டும் நிலைநாட்டும் ஆக்கிரமிப்பு எண்ணம் துருக்கிக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் முடிவோடு மாறுபட்டாலும், அதிபர் ட்ரம்புக்கும் தமக்கும் இடையே எந்தவொரு பெரிய பிளவோ அல்லது மோதலோ இல்லை என்று நெதன்யாகு தெளிவுபடுத்தியுள்ளார்.