உலகம்

எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் பயங்கரவாத அச்சுறுத்தலாக மாறுகிறது : பெலாரஸ் அரசு

Veeramani

பெலாரஸ் நாட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக எதிர்க்கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறது. இது நாட்டின் பயங்கரவாத அச்சுறுத்தலாக வளர்ந்து வருவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ஆகஸ்ட் 9ஆம் தேதி பெலாரஸ் தேர்தலில் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, மகத்தான வெற்றிபெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் தேர்தலில் மோசடி செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி மிகப்பெரிய  ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து நடத்திவருகின்றனர். லுகாஷென்கோ இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பெலாரஸை ஆட்சி செய்து வருகிறார். பெலாரஸில் நடைபெற்றுவரும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கிடையில், ரஷ்யாவின் எஸ்.வி.ஆர் வெளிநாட்டு உளவுத்துறையின் தலைவர் நேற்று பெலாரஸுக்கு வருகை தந்தார். இது பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு ரஷ்யாவின் ஆதரவான வருகை என்று பரவலாகக் பேசப்படுகிறது.

நேற்று ஐரோப்பிய நாடாளுமன்றம் பெலாரஸின் எதிர்க்கட்சிகளுக்கு, அதன் வருடாந்திர மனித உரிமை பரிசை வழங்கியுள்ளது. பாராளுமன்றம் தனது விருது அறிக்கையில் 10 எதிர்க்கட்சி நபர்களை மேற்கோள் காட்டியுள்ளது, இதில் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் ஸ்வியட்லானா சிகானவுஸ்காயா மற்றும் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஸ்வெட்லானா அலெக்ஸிவிச் ஆகியோர் அடங்குவர். மோசடி தேர்தல்களை நடத்துவதன் மூலமும், எதிரிகளை சிறையில் அடைப்பதன் மூலமும், சுயாதீன ஊடகங்களை குழப்புவதன் மூலமும் லுகாஷென்கோ அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டதாக ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், கனடா மற்றும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளன.